மிலேனியம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம்-சிறிசேன

319 0

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மிலேனியம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, தொலைபேசியூடாக மங்களவுக்கு அழைப்பினை ஏற்படுத்தி இவ்வாறு குறிப்பிட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமெரிக்காவுடனான மிலேனியம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துவிட்டார். ஆனாலும் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு ஊடக சந்திப்பில், மிலேனியம் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கையெழுத்திடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர், ஜனாதிபதியை நேரில் சந்தித்து, குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தினர்.

அதனடிப்படையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், எந்தவொரு காரணத்திற்காகவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாமென அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.