அடுத்த வருடம், சார்வரி வருடம் எனும் பெயரோடு பிறக்கவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டு ஆங்கில நாட்காட்டியின் பிரகாரம், புத்தாண்டு தினமாகச் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதியும், புத்தாண்டுக்கு முன் தினமாகச் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியும் விடுமுறை நாட்களாக அரசாங்க வர்த்தமானி ஊடாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் குறித்த நேரம், ஆங்கில நாட்காட்டியின் பிரகாரம் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி (தமிழ் நாட்காட்டியின் படி, பங்குனி மாதம் 31 ஆம் திகதியாகவும், ) திருக்கணித பஞ்சாங்கப் படி நேரம் இரவு 8.23 ஆகவும், வாக்கிய பஞ்சாங்கப் படி நேரம் இரவு 7.26 ஆகவும் உள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழ் நாட்காட்டியின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதியை அடுத்து வரும் சித்திரை மாதம் முதலாம் திகதியே கொண்டாடப்படுவது வழமை.சூரியோதயத்தோடு சார்வரி என்ற புதுவருடம் காணவிருப்பது ஆங்கில நாட்காட்டியின் படி ஏப்ரல் மாதம் 14ஆம் திகதியும், தமிழ் மாதப் படி சித்திரை மாதம் 01 ஆம் திகதியும் ஆகும்.
தமிழ், சிங்களப் புத்தாண்டு பிறக்கும் தினமாகச் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதியையும், தமிழ் சிங்களப் புத்தாண்டு பிறக்கும் தினத்திற்கு முன்னைய தினமாகச் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியையும் வருடப்பிறப்புக்கு முதல் நாளாக அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அவற்றை விடுமுறை நாட்களாகவும் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், தமிழர்கள் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதியைப் புத்தாண்டு நாளாக ஆரம்பிக்கவுள்ள அன்றைய நாளைப் புத்தாண்டு நாளாகவும் விடுமுறை நாளாகவும் அறிவிக்கும்படி இந்துக் குருமார்கள், சமயப் பெரியோர்கள் எனப் பலதிறத்தோரும் வேண்டிக் கொண்டதற்கு அமைவாகத் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன்,
2020 ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதியை தமிழ்ப் புத்தாண்டு நாளாகவும் விடுமுறை நாளாகவும் அறிவிக்கும்படி பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் இவ்விடயத்தை வர்த்தமானி மூலம் அறிவித்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கும் அமைச்சர் மனோ கணேசன் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

