மின்சார சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சேதமான மீட்டரை மாற்றுவதற்கு மீட்டர் கட்டணத்தோடு, கூடுதலாக ரூ.500 செலுத்தவேண்டும்.நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வந்த பல சேவைகளுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சேவை இணைப்பு கட்டணம், மீட்டர் வாடகை, மீட்டர் எச்சரிக்கை வைப்புத்தொகை, மறுஇணைப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணங்களும் அடங்கும். அரசியல் பரிந்துரைகள் காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தால் மின்சார கட்டணத்தை உயர்த்த முடியாது.
இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வேண்டுகோளை ஏற்று, இந்த அறிவிப்பினை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதே சமயத்தில் பிற ஆதாரங்கள் மூலமாக வருவாயை பெருக்கவேண்டிய நிலைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மீட்டரை மாற்றுவதற்கு, மீட்டர் கட்டணத்தோடு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல் வேறு இடத்துக்கு மீட்டரை மாற்றுவதற்காக ரூ.500, மீட்டர் கட்டணத்தோடு வசூலிக்கப்பட உள்ளது. மீட்டரின் திறனை பொறுத்து கட்டணம் வேறுபடும். ஒருவேளை உயர் அழுத்த மீட்டராக இருக்கும் பட்சத்தில் மீட்டர் கட்டணத்தோடு சேர்த்து ரூ.2 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின்சார இணைப்பை தற்காலிகமாக துண்டிப்பதற்கு ‘சிங்கிள் பேஸ்’-க்கு ரூ.500-ம், ‘திரீ பேஸ்’-க்கு ரூ.750-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல மின்சார ஊழியர்களின் உழைப்புக்கு ஏற்றவாறு சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் முடிவு எடுத்துள்ளது.

