தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவானதன் பின்னர் வௌிநாட்டு பணியாளர்கள் அனைவருக்கும் ஒய்வூதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதாக தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட பிரச்சார கூட்டம் ஒன்று நேற்று (24) கரந்தெணிய நகரில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இவர்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுப்பவர்கள். நாட்டினுள் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் பாரியளவில் பங்களிப்பு செய்கின்றனர்.
அதன் காரணமாக வௌிநாட்டில் இருக்கும் நமது ஊழியர்களுக்கு நிவாரண திட்டம் ஒன்றை செயற்படுத்துவது எனது கடமையென்ற வகையில், வௌிநாட்டில் தொழில் புரியும் இந்நாட்டு பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்கள் இலங்கைக்கு வரும் போது அவர்களுக்கு நிவாரண முறையின் கீழ் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு விசேட வரிச் சலுகை ஒன்று பெற்றுக் கொடுக்கப்படும்.
வௌிநாட்டில் தொழில் புரிந்தாலும் அவர்களும் இந்நாட்டு குடிமக்களே. அவர்களுக்கும் வாக்குரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும். அந்த உரிமையை பெற்றுக் கொடுக்க இந்நாட்டு ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கம் மாறும் போது அமைச்சர்களுக்கு மற்றும் அரச பிரதானிகளுக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்வது வாடிக்கையாகி உள்ளது. எனினும் நான் அதுபோன்று ஒரு வாகனத்தையேனும் கொண்டு வர அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

