தேசிய உளவுத் துறையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன உட்பட 18 பேரிடம் வாக்குமூலம் பதிவு

281 0

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை  தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும்  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின்  விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன விடுமுறை என்பதால் மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே பிரதான நீதிவான் விடுமுறை என்பதைக் காரணம் காட்டி இவ்விருவரின் விளக்கமறியலையும் மேலதிக நீதிவான் நீடித்தார்.

இதன்போது, விசாரணையாளர்களான சி.ஐ.டியினருடன் மன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  திலீப பீரிஸ்,  இந்த விவகாரத்தில் இதுவரை தேசிய உளவுத்துறை பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன உள்ளிட்ட 18 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாக கூறினார்.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தை குறிக்கும் விஷேட மேலதிக அறிக்கையையும் சி.ஐ.டி.யினர் மன்றில் சமர்ப்பித்தனர்.