பருவமழை தீவிரம்- தென்மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

226 0

தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு அணை நிலவரங்களை கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.வங்க கடலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.

இதனால் ஏரி, குளங்கள், அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வருகிறது. ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 14 செ.மீ. மழை பெய்ததால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கோதையார் லோயர் அணை பகுதியில் 9 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது.

சுரலகோடு, குலசேகரபட்டினம் பகுதியில் 8 செ.மீ. மழையும், மயிலாடி, தூத்துக்குடியில் 7 செ.மீ. மழையும், தென்காசி, வேடசந்தூர், தக்கலை உள்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு அணை நிலவரங்களை கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்பட்டால் நிவாரண முகாமுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மழை நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதே போல் நீலகிரி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டும் எடப்பாடி பழனிசாமி தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.