தொழில்முறை விவசாயத்தில் சாதிக்கும் சேலம் ‘வசிஷ்டா உழவர்கள்

263 0

‘உழவன் கணக்கு பார்த்தால், உலக்குக்கு கூட மிஞ்சாது’ என்பது பழமொழி. ‘உழவன் கணக்கிட்டு உழவு செய்தால் கணிசமான வருவாய் ஈட்ட முடியும் என்ற புதுமொழியுடன் பெரும் மாற்றத்தை நோக்கி சேலம் வசிஷ்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயங்கி வருகிறது.

வசிஷ்டா உழவர் உற்பத்தி யாளர்கள் திட்டமிடல், தொழில் அறிவு, இயந்திர பயன்பாடு, தரம் பிரித்தல், விற்பனை, சந்தை நிலவரம் அறிதல் என்ற கோட்பாடுகளை கொண்டு தொழில் முறையாக விவசாயத்தை தூக்கி பிடித்து, தொழில் அதிபர்களாக மாறும் சூத்திரத்துக்கு அடித்தள மிட்டுள்ளனர்.

 

நேரடி விற்பனை

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வசிஷ்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், திருவள்ளுவர் உழவர் நிறுவனம் மூலம் 2 ஆயிரம் விவசாய உற்பத்தியாளர்கள், பொது மக்களிடம் நேரடி விற்பனையில் களம் இறங்கி யுள்ளனர். இந்த விவசாய கூட்டமைப்பைச் சேர்ந்த 200 பேர் சுழற்சி முறையில் கடை, சந்தை வழி, ஆன்-லைன் வர்த்தகம் மூலம் காய்கறி, பழம், பால் பாக்கெட், சிறுதானிய வகைகளுக்கான உமி நீக்கல், 45 வகையான விவசாயப் பொருட்களை மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.

இதன் மூலம் மாதம் தோறும் கணிசமான வருமானத்தை ஈட்டி, தொழில் முறை விவசாயத்தை பரவலாக்கிடும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை மலிவு விலையில் வாங்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இடைத்தரகரின்றி…

இதுகுறித்து வசிஷ்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவன மேலாண் இயக்குநர் அபிநவம் ஜெயராமன் கூறியதாவது:

இந்திய விவசாயிகள் தொழில் முறை விவசாயத்தின் மூலம் தொழில் அதிபர்களாக மாற்றம் ஏற்படும் காலம் விரைவில் வரும். விவசாய உற்பத்தியாளர் களும் உபயோகிப் பாளர்களும் ஒரேதளத்தில் இருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்கள் விவசாயி களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக வாங்கிட முடியும்.

இதற்காக சேலம் வெஜ்ஜிஸ் செயலி அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் சேலம் மாநகரில் ஒன்பது தபால் அஞ்சல் குறியீட்டு எண்களுக்குள் வசிக்கும் மக்கள், எங்களின் விவசாய உற்பத்தி பொருட்களை ‘ஆன்-லைன்’ வர்த்தகம் மூலம் வாங்கலாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங், குளோபல் மார்க்கெட்டிங் சாதாரண விவசாயி களும் ஈடுபட முடியும் என்பதை விவசாயிகளின் கூட்டு முயற்சியால் சாதித்து காட்டி வருகிறோம்.

விதை முதல் விற்பனை வரை

விவசாயிகள் விதை முதல் விற்பனை வரை நேரடியாக ஈடுபட்டு, வருவாய் ஈட்டும் வித்தையை கற்று தேர்ந்ததோடு மட்டுமல்லாமல், பிற விவசாயிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் கற்று தரும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விவசாயிகளுக்கு பிரத்யேக பயிற்சி அளித்து வருகிறோம்.

மேலும், பொதுமக்களும், விவசாயிகளிடம் இருந்து விவசாயம் சார்ந்த பொருட்களை நேரடியாக பெற்று, தொழில்முறை வியாபாரத்தில் ஈடுபடவும் உதவி புரிகிறோம். பள்ளி, கல்லூரி, உணவு விடுதி, கடை, நிறுவனத்தை சேர்ந்தவர்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், விரைவில் தேசிய அளவில் சேலம் விவசாயிகள் தொழில் முறை விவசாயிகளுக்கான மாதிரியாக விளங்குவார் என்பது நிச்சயம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.