நாடாளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

294 0

சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடாளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்திற்கு இரண்டுவாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னதாக தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி கடந்த மாதம் 26ஆம், 27ஆம் திகதிகளில் நாடாளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 30ஆம் திகதி, அமைச்சரவை உபகுழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அமைய, கடந்த முதலாம் திகதி அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டது.

அந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய, தங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான யோசனைத் திட்டமொன்று கொண்டுவரப்பட்டதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த யோசனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை உப குழுவுக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் சாதகமான தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவேண்டி ஏற்படும் என்றும் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.