காணாமல் போன கணவன் பற்றி தகவல் தாருங்கள் ; கைக்குழந்தையுடன் கணவனை தேடி அலையும் முல்லைத்தீவு பெண் !

73 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடொன்று  பதிவு செய்யப்பட்டுள்ளது .

புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த 07.10.2019 இரவு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று சாப்பாடு வாங்கிவருவதாக மனைவிக்கு சொல்லிவிட்டு சென்ற நிலையில் வீடுதிரும்பவில்லை இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பன அருகில் உள்ள ஒழுங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன .

தனது கணவர் காணாமல் போனது பற்றி கருத்து தெரிவித்த மனைவி  கராத்தே வகுப்புகளை நடத்திவரும் எனது கணவர்  சமூக செயற்பாட்டாளராவார். போரால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவி திட்டங்களை பெற்று  வழங்கி வரும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருபவர். எமக்கு ஐந்து வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கின்றார்.

மற்றைய குழந்தை பிறந்து 39 நாட்கள் தான் ஆகின்றன. எனது கணவரிடம் அடிக்கடி அரச புலனாய்வாளர்கள் வீட்டுக்கு வந்தும் வெளியில் அழைத்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காணாமல் போயுள்ளார் . கைக்குழந்தையுடன் எனது கணவரை தேடி அலைகின்றேன் . எனது கணவரை பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். எனது தொலைபேசி இலக்கம் 0778116528 என வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இந்தநிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட  முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் . இந்த சம்பவம் குறித்து  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறையிடவுள்ளதாக காணாமல் போயுள்ளவரின் மனைவி தெரிவித்துள்ளார் .