முல்லேரியா பகுதியில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனித மரியா ஒழுங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலே நேற்று சனிக்கிழமை குறித்த சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 24 திகதி பெண்ணொருவரிடமிருந்து 6 இலட்சம் ரூபாய் பணத்தையும் , 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் அடங்கிய பை ஒன்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக முல்லேரியா பொலிஸ் நிலையத்திலும் , மிரிஹான குற்றப்பிரிவுக்கும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குற்றப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்தே , இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலாங்கொட மற்றும் ரணால ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 43,59 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை, குற்றப்பிரிவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மிரிஹான பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

