நாட்டிலுள்ள அனைத்து மக்களினது வாழ்க்கையையும் மேம்படுத்தி, அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவேன் என மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “நாட்டில் அநாவசியமாக செலவாகின்ற அரசாங்கத்தின் நிதியை இனங்கண்டு அதனை வறுமை பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக செலவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன்.
அதாவது சாதாரண மாணவர்களும் பூரண கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, கல்வியில் புதிய புரட்சியை உருவாக்குவேன்.
மேலும் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவேன். அதிலும் ஆசிரியர்களுக்கு அதிக சலுகைகளை வழங்குவேன்.
தேசிய பாதுப்பு விடயத்தில் வெளிநாடுகளின் அறிவித்தலுக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. அதாவது எமது நாட்டின் சூழலுக்கு ஏற்பவே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அந்தவகையில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பு நிச்சயம் உறுதி செய்யப்படும். நவீன நாகரீகத்துக்கு ஏற்றவாறு சட்ட திட்டங்களை மதித்து செயற்படுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்குவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

