கொரிய நல்லுறவின் ஊடாக இலங்கையில் பொருளாதார அபிவிருத்திகள்- சாகல

198 0

இலங்கை மற்றும் கொரிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவின் மூலம் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் பல இலங்கைக்கு கிடைக்கப்பெறுவதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற கொரியாவின் தேசிய தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சாகல ரத்னாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “கொரியா மற்றும் இலங்கை இடையே மிக நெருங்கிய உறவு காணப்படுகின்றது. இரு நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

இதன் மூலம் பூகோளவியல் முக்கியத்துவத்தை ஒன்றுப்படுத்தல், அறிவுச்சார் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், சுங்க திணைக்களத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுத்தல், தொழில்நுட்ப பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு புதிய வழிமுறைகளை உருவாக்குதல், திறந்த பொருளாதார முறை, முதலீட்டு மற்றும் சுற்றுலா துறைகளை அபிவிருத்திச் செய்வதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது.

இலங்கை மற்றும் கொரியா இடையே இயற்கை அழிவுகளை முகங்கொடுக்க கூடிய வகையில் மாபெரும் கட்டடங்களை நிர்மாணிக்கும் பொருட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அதிகளவில் இயற்கை அனர்தங்களிற்கு முகங்கொடுக்கும் மட்டக்களப்பு, மன்னார், முல்லைதீவு, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்ட மக்கள் பயன்பெறவுள்ளனர்.

மேலும் இலங்கை மாணவர்களிற்கு கொரியாவில் பட்டப்படிப்பு அல்லது பட்டப்படிப்பின் பின் படிப்புகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இரு நாடுகளிடையே காணப்படுகின்ற பொருளாதார, வியாபார மற்றும் கல்விச்சார் தொடர்புகள் காரணமாக இந்நாடுகளின் சுற்றுலாத்துறை முன்னேற்றத்தில் பெரும் தாக்கம் செலுத்துகின்றது. இரு நாட்டு மக்களிடையேயான உறவும் வளர்ச்சியடைகின்றது.

தற்பொழுது 30,000 வரையிலான மக்கள் கொரியாவில் தொழில்புரிவதுடன் அது கொரியா மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றது.

இவ்வூழியர்கள் கொரியாவில் முன்னெடுக்கப்படுகின்ற உற்பத்தி துறைகள், கட்டட நிர்மாணத்துறை மற்றும் மீனவ தொழிலில் ஈடுப்படுகின்றார்கள். இதன் மூலம் இலங்கைக்கு பெருந்தொகை வருமானம் கிடைக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.