சிங்கங்களைக் கொன்று 342 கிலோ எலும்புகள் கடத்தல்: ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் 3 பேர் கைது

281 0

ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் விமானத்தின் மூலம் கடத்த முயன்ற 342 கிலோ சிங்க எலும்புகளை தென்னாப்பிரிக்க அதிகாரிகள் நேற்று மாலை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்ததாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”பெரும்பாலும் ஆசியாவில் மருத்துவ உபயோகத்திற்கும் மற்றும் ஆபரணத் தயாரிப்புகளுக்கும் இந்த சிங்க எலும்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

நேற்று மாலை மலேசியா புறப்பட இருந்த விமானத்தின் சரக்குப் போக்குவரத்துப் பகுதிகள் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டன. மலேசியாவிற்கான பொருட்கள் கொண்டுசெல்லும் கிரேட்ஸ் எனப்படும் மரப்பலகைப் பெட்டிகளிலிருந்த சரக்குகள் பற்றி தவறாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல்களை அடுத்து இந்தப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

சரக்குப் போக்குவரத்து பகுதிகள் பரிசோதிக்கப்பட்டபோது, அலுமினியத் தாளில் மூடப்பட்டிருந்த 34 பெட்டிகளில் சிங்க எலும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அவை மொத்தம் 342 கிலோ எடையுள்ளவை.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள சிங்கங்களின் எலும்புகளை ஏற்றுமதி செய்வது சட்டபூர்வமானது என்றாலும், அவற்றை வெளியே அனுப்ப சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி பெறப்பட வேண்டும். இதில் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர். சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரை மட்டும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது”.

இவ்வாறு தென்னாப்பிரிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், ஏற்கெனவே சிங்க எலும்புகளை சுமந்துசென்ற ஒரே ஏர்லைன்ஸ் கேரியரான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்க எலும்புகள் ஏற்றுமதி நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறியது.

தென்னாப்பிரிக்காவில் 11,000 க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உள்ளன. அவற்றில் 3,000 சிங்கங்கள் தேசியப் பூங்காக்களில் உள்ளன.