பேனர் விவகாரம்: பிரதமர் மோடியை மலர் தூவி கூட வரவேற்கலாம்; சுபஸ்ரீயின் தாயார் பேட்டி

213 0

தமிழக அரசே பேனர்கள் வைக்க அனுமதி கேட்பது வருத்தம் அளிப்பதாக, சுபஸ்ரீயின் தாயார் கீதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட் – அவுட்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பேனர் விபத்தால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், வரும் 11-ம் தேதி இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, இருவரையும் வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் வெளியுறவுத் துறை சார்பிலும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பொதுமக்களுக்கு இடையூறின்றி பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதுதொடர்பாக, சுபஸ்ரீயின் தாயார் கீதா தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பேனர்களால் உயிரிழந்த கடைசி உயிராக சுபஸ்ரீ இருக்க வேண்டும் என்பதால்தான் பேனர்கள் வேண்டாம் என்பதை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். சில கட்சிகளும் பேனர் வைக்க மாட்டோம் என அறிவித்தன. பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எல்லோரும் அதனை ஏற்றுக்கொண்ட பிறகு, தமிழக அரசு பேனர் வைப்பது, கஷ்டமாக இருக்கிறது.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு பேனர்கள் வைப்பதாக தமிழக அரசு சொல்கிறது. இதன் மூலம் பேனர் கலாச்சாரம் ஒழியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பேனர்களே இல்லாமல் இருந்தால் நல்லது. பிரதமர் மோடியை பேனர் வைத்துத்தான் வரவேற்க வேண்டும் என்ற கலாச்சாரம் இங்கு தான் இருக்கிறது. மற்ற இடங்களில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மலர் தூவி கூட வரவேற்கலாம். இனி பேனர் கலாச்சாரமே இருக்காது என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது,” என சுபஸ்ரீயின் தாயார் தெரிவித்தார்.