அத்தியாவசிய சேவையாக்கப்பட்டாலும் வேலை நிறுத்தம் தொடரும் !

208 0

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பது தற்போதைய வேலைநிறுத்த போராட்டத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்த ரயில்வே தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தப் போராட்டம் தடையின்றி தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து, விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளார் உதய ஆர். செனெவிரத்னவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே ரயில் இயந்திர இயக்குனர் சங்க செயலாளர் இந்திக தொடாங்கொட மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் இதுவரை ரயில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை எனவும் தெரிவித்த அவர், வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று கூடி, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பள  முரண்பாடுகளுக்கு  தீர்வு  உட்பட  பல கோரிக்கைகளை  முன்வைத்து  ரயில்  நிலைய  பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்களின்  தொழில் சங்கங்களின் சுமார் 15000 உழியர்கள் கடந்த புதன் கிழமை நள்ளிரவிலிருந்து முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.