சென்னையில், முதியோர் தினத்தையொட்டி ஆடல்-பாடல் என முதியோருக்கான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் உற்சாகமாக ஆடிப்பாடிய சிறந்த தாத்தா-பாட்டிக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
உலக முதியோர் தினத்தையொட்டி, ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பு சார்பில் சென்னை சேத்துப்பட்டில் முதியோர் தின விழா நடந்தது. விழாவுக்கு அந்த அமைப்பின் இயக்குனர் வி.சிவகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், மீன்வளத்துறை இயக்குனர் ஜி.எஸ்.சமீரன், தூர்தர்ஷன் கேந்திரா இயக்குனர் எம்.அண்ணாதுரை, சென்னை பெட்ரோலியல் கார்ப்பரேஷன் லிமிடெட் துணை பொதுமேலாளர் எஸ்.மாலதி விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களுக்கான ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் வயதை மறந்து முதியோர் துள்ளி குதித்து நடனமாடி அசத்தினர். தள்ளாத வயதிலும் சளைக்காமல் ‘மேக்-கப்’ போட்டு ஒய்யார நடை நடந்துவந்து அரங்கை அதிர செய்தனர். ‘பேட்ட’ படத்தில் வரும் ‘இளமை திரும்புதே…’ பாடலுக்கு ஒரு தாத்தா-பாட்டி ஆடியது பார்வையாளர்களிடம் இருந்து விசில் பறக்க செய்தது.
விழா நிறைவில் சிறந்த தாத்தா விருது சுப்புராம் என்பவருக்கும், சிறந்த பாட்டி விருது பாத்திமா என்பவருக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை போலீஸ் ஏ.டி.ஜி.பி. சகீல் அக்தர் வழங்கி கவுரவித்தார். நிறைவு விழாவில் எல்.அன்ட்.டி. கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாக அதிகாரி ஜே.கபிலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து பார்வையாளர்கள் காயத்ரி கிருஷ்ணன், நந்தினிஸ்ரீ ஆகியோர் கூறுகையில், “தள்ளாத வயதிலும் முதியோர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்வையிடும் யாருக்கும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றும். இந்த நிகழ்ச்சியை பார்த்து அழுதே விட்டோம்”, என்றனர்.

