எந்த ஒரு தமிழரும் இத்தனை விருதுகளைப் பெற்றதில்லை: நடிகர் சிவாஜி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம்

307 0

நடிகர் சிவாஜி பற்றி நாள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாள் சென்னையில் இன்று கொண்டாடப்பட்டது. அடையாறில் உள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள சிவாஜி கணேசனின் உருவப் படத்துக்கு மலர் தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிவாஜி குடும்பத்தினர், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜு அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சிவாஜி நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும், எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ‘ஆறு மனமே ஆறு’ பாடல். படங்களில் அவரின் ஸ்டைலை யாராலும் செய்யவே முடியாது. எந்தக் கதாபாத்திரம் ஆனாலும் அதில் ஒன்றி, முத்திரை பதித்தவர் சிவாஜி. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ உள்ளிட்ட பட வசனங்கள் காலம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

 

இந்த உலகம் உள்ளவரை குடிகொண்டிருக்கிற நடிகர் சிவாஜி. அவரின் பிறந்த நாள் அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. நடிகர் சிவாஜி பற்றி நாள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம். உலகம் முழுவதும் தமிழின் பெருமையைக் கொண்டு சேர்த்த பெருமை அவருக்கு உண்டு.

அவர் ஆற்றல்மிக்க நடிகர் மட்டுமல்ல, அன்புள்ளம், மனிதநேயம் கொண்டவர். எந்த ஒரு தமிழரும் இத்தனை விருதுகளைப் பெற்றதில்லை. பத்மஸ்ரீ, பத்மபூஷண், செவாலியே, தாதா சாகேப் பால்கே விருது, கலைமாமணி என விருதுகளின் பட்டியல் நீளும்” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.