வவுனியாவில் இளைஞர் குழு மதுபோதையில் அடாவடி. பொலிஸார் அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்டு

425 0

வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் இன்று மாலை இளைஞர் குழுவொன்று மதுபோதையில் அடாவடி புரிந்ததாகவும் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் அசமந்தமாக அவர்கள் செயற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சம்பவத்தை கண்ணுற்ற ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்காவில் வவுனியா மாவட்ட பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மட்ட உதைபந்தாட்ட இறுதிப்போட்டி 3 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் மைதானத்தினை சூழ நின்று போட்டியை பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் தினமும் மதுபோதையில் கூட்டமாக நிற்கும் இளைஞர் குழு தமக்குள் மோதிக்கொண்டனர். இந் நிலையில் போட்டியை பார்வையிட்டுக்கொண்டிருந்த நொச்சிக்குளம் பாடசாலை அதிபரை தாக்கினர். இதனை தடுக்கச்சென்ற பெற்றோர் ஒருவரையும் குறித்த குழு தாக்கியது.

இதனால் மாணவர்கள், பெற்றோர் மைதானத்தில் அச்சமடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியிருந்தனர். இந் நிலையில் தகாத வார்த்தை பிரயோகத்தினை பயன்படுத்திவாறு மதுபோதையில் நின்ற இளைஞர் குழு மைதானத்தினை நோக்கி கற்களை வீசத்தொடங்கியுள்ளனர். இதனால் ஆசிரியர் ஒருவரின் தலையில் கல் பட்டு காயமடைந்தார்.

பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அப்பகுதிக்கு வருகை தந்த இரு போக்குவரத்து பொலிஸார் குறித்த இளைஞர் குழுவுடன் சிரித்து கதைத்து விட்டு முறைப்பாடு செய்தவர்களிடம் வருகை தந்து விடயத்தினை கேட்டறிந்தனர்.

இளைஞர் குழுவுடன் சிரித்து கதைத்து விட்டு தம்மிடம் வருகின்றீர்களா என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோபமடைந்தனர். இந் நிலையில் பொலிஸார் குறித்த அதிபரை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்து சென்றிருந்தனர்.