நலத்திட்டங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறி வருகின்றன- முதலமைச்சர் பேச்சு

203 0

அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்டங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறி வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.சேலம் மாவட்டம் வீரபாண்டியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சிறப்பு முகாமில் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் என்ன காரணத்திற்காக இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக பதில் கடிதம் அனுப்பப்படும்.

இந்த மனுக்கள் பெரும்பாலும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்குதான் அதிகமான மனுக்கள் கொடுக்கிறார்கள். அதுபோல் நீண்ட நாட்களாக வசித்து வரும் இடத்திற்கு பட்டா வாங்காமல் இருப்பார்கள். அப்படி பட்டா வாங்காமல் இருப்பவர்கள் தாங்கள் வசிக்கின்ற பகுதிக்கு பட்டா வேண்டும் என விண்ணப்பித்தால், அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுதி இருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்குவார்கள்.

பல பேர் நிலத்தை வாங்குவார்கள், வீடுகள் வாங்குவார்கள். ஆனால் பட்டா மாறுதல் செய்யாமல் இருப்பார்கள். அவர்கள் மனு கொடுத்தால் அந்த மனுவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பட்டா மாறுதல் செய்து கொடுக்க அரசு ஏற்பாடுகள் செய்யும்.

அதே போல் இன்னும் பல்வேறு பிரச்சனைகளான தங்கள் பகுதிகளில் இருக்கின்ற குறைபாடுகள் எல்லாவற்றையும் மனு மூலமாக சுட்டிக்காட்டுகின்றபோது அதை அரசு ஆய்வு செய்து அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும்.

வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சரின் சூரிய மின் ஒளி வசதியுடன் பசுமை வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் குடியிருப்பு திட்டத்தின் கீழ் மானிய நிதி உதவிகள், பயிர்கடன் உதவிகள், சுய உதவி குழுக்களுக்கு உதவிகள் உள்பட பல்வேறு உதவிகள் பல இவ்விழாவில் வழங்கப்பட்டுள்ளது.
முக ஸ்டாலின்

இன்றைக்கு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அரசு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இதுபோல் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு இந்த ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டை செல்கின்ற இடத்தில் எல்லாம் பேசி வருகிறார்.

அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு துறையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்பட்டு, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை அளித்து வருகின்றது என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

ஒரு அரசாங்கம் ஒரு தொகுதியிலே எவ்வளவு பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில குறிப்புகளை இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன்.

அந்த வகையில் ஊராட்சி துறையில் 8 ஆண்டுகளில் 213 கோடியே 38 லட்சம் மதிப்பில் 29531 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே அம்மா இருக்கின்ற பொழுதில் இருந்து அம்மா மறைவுக்கு பிறகு தொடர்ந்து அ.தி.மு.க. அரசு 8 ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ள பணிகள் இவை என்பதை சுட்டிகாட்டுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.