யாழ்.மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்றவர்களாக உள்ளார்கள்!

229 0

யாழ்.மாவட்டத்தில் அரச காணிகளைத் தேடிக்கொள்வது என்பது பெரும் சவாலான விடையமாகவுள்ளதுடன். யாழ்.மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்றவர்களாக பதிவு செய்துள்ளார்கள் என யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்பிரிவுகுட்பட்ட கல்லுண்டாய் வெளியில் புதிய வீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளக வீதிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

காணியற்றவர்களாக உள்ளவர்கள் நிரந்தர வீடுகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சால் வழங்கப்பட்ட வீடுகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கே வழங்கப்படுகின்ற நிலையில் இத்தகையவர்களும் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளபோது இவர்களுக்கு காணிகள் இல்லாமைனால் குறித்த வீட்டுத்திட்டங்கள் கிடைக்காதுள்ளது. இவர்களுக்கு அரச காணி வழங்குவதில் பல சிரமங்களே உள்ளது.

யாழ்.மாவட்டத்தில் அரச காணி என்பது மருதங்கேணி பிரதேச செயலகர் பிரிவின்கீழே உள்ளது. காணி இல்லாதவர்களை மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் குடியமர்ந்தால் காணிகள் வீடுகள் வழங்கமுடியும் என கோரினால் 99 வீதமானவர்கள் அதற்கு மறுப்பே தெரிவிக்கின்றார்கள்.

மேலும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகளில் குறிப்பாக நீதிமன்றக் காணிகள் தொழிநுட்பக் கல்லூரிக்குரிய காணிகள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குரிய காணிகள் போன்றவற்றில் இடம்பெயர்ந்த மக்கள் குடியமர்ந்திருந்த நிலையில் குறித்த காணிக்குரிய திணைக்களங்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்தமையினால் குறித்த மக்களை குறித்த இடங்களில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இத்தகைய மக்கள் மாவட்ட செயலகத்தில் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தனர். மாவட்ட செயலகத்திலே இத்தகைய மக்களை குடியமர்த்துவதற்கு பல சிரமங்கள் இருந்தது. இத்தகைய நிலையில் தான் கல்லுண்டாய் வெளியிலுள்ள காணிகளில் மக்களை குடியமர்த்துவதற்கான திட்டங்களை வகுத்தோம்.

அதிலும் குறித்த மக்களுக்கு அங்கு வசிப்பதற்கு விருப்பமா என்று அவர்களுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுத்தோம். குறித்த பகுதியானது பல்வேறு சவால்களைக் கொண்ட பிரதேசம் குறிப்பாக தாழ்நிலப்பகுதி குடிநீர் வசதியின்மை மின்சார வசதிகள் இல்லாத இடம்.எனினும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இத்தகைய உதவித் திட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவற்றில் நீதிமன்றக் காணிகளில் இருந்த 30 குடும்பங்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் காணியற்றிருந்த 20 குடும்பங்கள் ஆகியவர்களுக்கு கல்லுண்டாய் வெளியில் 50 வீடுகள் கட்டுவதற்கான ஆரம்பிக்கப்பட்டது.

 

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியினால் குறித்த பகுதியானது அனைத்து வசதிகளையும் கட்டங்கட்டமாக அமையப்பெறக்கூடிய கிராமமாக குறித்த இடம் உருவாக்கம் பெறுகின்றது. வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக யாழ்.மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 1500 வீடுகள், இரண்டாம் கட்டமாக ஆயிரம் வீடுகள், தற்போது 300 வீடுகள், இந்த வருடம் கிடைக்கப்பெற்றது.

இதன் ஊடாகவே குறித்த பகுதிகளில் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றது. கட்டம் கட்டமாக குறித்த பகுதியானது அனைத்து வசதிகளையும் கொண்ட பிரதேசமாக மாற்றமடையும் என்றார்.