மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

204 0

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணைக்கு கடந்த மாதம் அதிகபட்சமாக 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை கடந்த 7-ந் தேதி நிரம்பியது. பின்னர் மழை குறைந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வவரத்து படிப்படியாக சரிந்தது.

இந்தநிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 7 ஆயிரத்து 812 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 9 ஆயிரத்து 97 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது . அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்துள்ளது.

நேற்று 119.94 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 119.95 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.