எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது: இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் – உதயநிதி ஸ்டாலின்

286 0

திமுக எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது எனவும் இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வந்தார். இன்று காலை ஈரோடு பெரியார் நகர் வீதிகளில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகத்திற்கு அவர் சென்று பெரியார் -அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தி எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. எந்த மொழிக்கும் தி.மு.க எதிர்ப்பு கிடையாது. இந்தி மொழி திணிப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிக்க முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும்.

பேனர் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினோம். மூன்று ஆண்டுகளாகவே பேனர் தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இளைஞர் அணியில் உள்ள எந்த நிகழ்ச்சியிலும் பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது என்று சொல்லி உள்ளோம். நிர்வாகிகள் அதை கடைபிடித்து வருகிறார்கள்.

அதைப்போல நடிகர் விஜய்யும் பேனர் பற்றி பேசியிருக்கிறார். ரசிகர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறார். இது பாராட்டத்தக்கது.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டிருந்தார். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு வெளிநாட்டு பயணம் செல்வதாக முதல்வர் கூறியிருக்கிறார். ஏற்கனவே நடத்திய முதலீட்டாளர் மாநாடு குறித்து தெளிவான பதில் எதுவும் இல்லை. இந்த வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் போதாவது தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்.

இளைஞரணி மாநில செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பெரியார் வாழ்ந்த வீட்டிற்கு வந்தது எனது வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு ரெயில்வே காலனியில் நடந்த இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், எஸ் எல் டி சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், பொருளாளர் பி கே பழனிச்சாமி, முன்னாள் எம்பி கந்தசாமி, கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், கேபிள் செந்தில்குமார், தலைமை கழக பேச்சாளர் இளைய கோபால், முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி, பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன் செல்வராஜ் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.