ஆப்கன் போரில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்: அதிபர் அஷ்ரப் கானி

205 0

ஆப்கனில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி உறுதியளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தின் கிழக்கில் உள்ள மலைப் பகுதியில் அறுவடைப் பணி முடிந்து மக்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அமெரிக்க ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 37பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலை ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சகமும், அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவ தரப்பில் , “அமெரிக்க ராணுவம் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அப்பகுதியில் தாக்குதல் நடத்தினோம்”என்று கூறப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காரணமாக ஆப்கன் அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்தப் போரில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது தவிர்க்கப்படும் என்று ஆப்கான் அதிபர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறும்போது, “ பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்க புதிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.அப்ப்வி மக்களின் உயிரிழப்பை தடுக்க இரவு நேரத்தில் தாக்குதல் நடத்துவது நிறுத்தப்படும்” என்றார்.

ஆப்கானிஸ்தான் போர்

ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்துவரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் போரை நிறுத்த அமெரிக்கா தலைமையில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பேச்சுவார்த்தை அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப்பின் முடிவு தலிபான்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.