வடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

231 0

வடமாகாணத்தில் உள்ள 15 குளங்களை புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும்  3 குளங்களாக மொத்தம் 15 குளங்கள் புனரமைக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இக் குளங்களின் புனரமைப்பிற்கு தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள் , மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் முதற்கட்டமாக 11.65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்குளங்கள் ஆழமாக்கப்பட்டு அகலமாக்கப்பட்டு மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் , கிளிநொச்சி பிரதேச செயலாளர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் , அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஐந்து மாவட்டங்களிலிருந்தும்  விவசாய அமைப்புக்களின் பிரநிதிதிகள் உள்ளிட்ட விவசாய சமூகத்தினர் கலந்துகொண்டனர்.