தெருக்களில் குப்பைகளை வீசினால் ரூ.1000 அபராதம் – நாளை முதல் அமலுக்கு வருகிறது

224 0

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் குப்பைகளை வீசினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் குப்பையை வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது, முதல் முறை, 500 ரூபாய், 2-வது முறை, 1,000 ரூபாய் அபராதம் மூன்றாவது முறை, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் மாரிச் செல்வி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மொத்தம், 340 தெருக்கள் உள்ளன.

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு, மக்கும், மக்காத குப்பையை எடுக்க, துப்புரவு ஊழியர்கள் தினமும், வருகின்றனர். தெருக்களில் குப்பை சேரும் இடங்களைத் தேர்வு செய்து அந்த இடத்தில் கோலம் போட்டு வழிபாட்டு இடங்களாக அமைத்துள்ளனர்.

எனவே குப்பைகளை தெருவில் வீச, தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி, தெருவில் குப்பை வீசினால், முதல் முறை, 500 ரூபாயும்; 2-ம் முறை, 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

மறுபடியும், இதே தவறை செய்வோர், காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, நகராட்சி விதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம், நாளை முதல் அமலுக்கு வருகிறது. எனவே, திருவள்ளூர் நகரை, சுத்தமாககவும், தூய்மையாகவும் பராமரித்து, சுகாதாரத்தை பேண, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.