தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாக சஜித் தெரிவிப்பு

302 0

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச, கட்சிக்குள் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் ஆதரவை பெற்றுகொள்ளுமாறு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தெரிவித்தமைக்கு அமைய பிரதித் தலைவர் பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி  தமக்கான ஆதரவை திரட்டி வருகின்றார்.

இந்நிலையில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச  நேற்று முன்தினம்  ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் குறித்து வினவிய போதே அவர் இவற்றைக் கூறினார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்வரும் தினங்களில் அவர்களையும் சந்தித்து எமக்கான ஆதரவுகளை பெற்றுக்கொள்ள நடவைக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.