சென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் உணவுத் திருவிழா

36 0

சென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் உணவுத் திருவிழாவினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநில நகர்ப்புற இயக்கம் ஆகியவை சார்பில் மதராசபட்டினம் விருந்து என்ற பெயரிலான உணவு-கலாச்சார திருவிழா சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு விதவிதமான சுவையுடன் கூடிய சைவ-அசைவ உணவுகள் தனித்தனி அரங்குகளில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மொத்தம் 160 அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இன்று தொடங்கி வைத்தார்.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, சத்தான, சுகாதாரமான, செறிவூட்டப்பட்ட, சரிவிகித உணவைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறையோடு தமிழ்நாடு அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று காலை தொடங்கி வரும் ஞாயிறு மாலை வரை நடைபெறவிருக்கின்ற ‘மதராசபட்டினம் விருந்து வாங்க ரசிக்கலாம், ருசிக்கலாம்’என்ற நிகழ்ச்சியை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பொழுதெல்லாம் இளம்வயதிலேயே மக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை பெருகி வருவதற்கு முதல் காரணம், நமது உணவுப் பழக்கவழக்கமே.
எடப்பாடி பழனிசாமி பாரம்பரிய உணவுகளை ருசி பார்த்த காட்சி

நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவுவகைகளான சாமை, கேழ்வரகு, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற இதர நவதானியங்களை அன்றாட உணவில் பயன்படுத்தியதனாலும், அதற்கேற்ப உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு வாழ்ந்ததினால் தான், அன்றைக்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவுநோய் போன்றவை அரிதாக காணப்பட்டது.

நமது அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவுப் பழக்கத்தோடு உடற்பயிற்சியும் மேற்கொண்டு நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் உடற்பயிற்சி எவ்வாறு உடலுக்கு வலிமையாக்குகிறதோ, அதுபோன்றே மனதை புத்துணர்ச்சியூட்ட யோகா மற்றும் தியான பயிற்சிகள் அவசியமாகிறது. இதனை பிரதமர் ஃபிட் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.

மத்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையரகம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேசப்பிதா மகாத்மாவின் 150-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் பல திட்டங்களை அறிவித்தது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற இப்பயணத்தில், வழியெங்கும் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து ‘குறைந்த உப்பு’, ‘குறைந்த சர்க்கரை’, ‘குறைந்த கொழுப்பு’ என்ற தாரக மந்திரத்தினை அடிப்படையாக கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு எடுத்த சிறந்த நடவடிக்கைகளுக்கு மகுடம் சூட்டும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை இந்தியாவில் முதல் சிறந்த மாநிலமாகவும், சிறந்த நகரமாக மதுரையும் மற்றும் சிவகாசியும் தேர்வு செய்யப்பட்டது.

நமது உடல்நலத்திற்காக பின்பற்றப்பட வேண்டிய வாழ்க்கை முறைகள், உண்ண வேண்டிய சத்தான உணவு வகைகள், உடல் ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்குவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு, ஆலோசனைகளைப் பெற்று, ஆரோக்கியமான தமிழ்நாட்டினை சமுதாயத்தினை உருவாக்கவேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

துணை முதல்-அமைச்சர் பேசியதாவது:

தற்போது ஏராளமான இளைஞர்களும், குழந்தைகளும் பர்கர், பீசா போன்ற துரித உணவுகளுக்கு ஆட்பட்டு உள்ளனர் என்பதை நினைத்து வேதனையாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.

மத்திய அரசு உணவுத் திருவிழாவை, பல்வேறு நகரங்களில் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தான் பாதுகாப்பான உணவு, சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவு, உணவு சார்ந்த தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், சத்து குறைபாடுகள், தடுப்பு முறைகள், ஆகியவை குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த மதராசபட்டினம் விருந்து விழா, மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சரோஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.