நிரவ் மோடி தம்பியை கைது செய்ய இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்

300 0

1,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடியின் தம்பி நேஹால் மோடியை கைது செய்ய சர்வதேச போலீஸ் இன்று ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் இதில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய நிரவ் மோடியின் தம்பி நேஹால் மோடியை கண்டதும் கைது செய்யும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் இன்டர்போலுக்கு (சர்வதேச போலீஸ்) மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வந்தது.
இன்டர்போல் வெளியிட்ட நோட்டீஸ்

நிரவ் மோடியின் மோசடி செய்திகள் வெளியானவுடன் துபாயில் உள்ள அவருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து 50 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான பணத்தை நேஹால் மோடி அள்ளிச் சென்றதாக இந்திய அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வங்கி மோசடி வழக்குகளில் நிரவ் மோடிக்கு எதிரான இந்திய அரசின் ஆதாரங்களை அழிப்பதற்கு அவர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, நேஹால் மோடியை கைது செய்ய சர்வதேச போலீஸ் இன்று ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, உலகில் உள்ள 192 நாடுகளில் அவர் எங்கே காணப்பட்டாலும் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார்.

பெல்ஜியம் நாட்டில் பிறந்து அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள நேஹால் மோடி(40), தற்போது அமெரிக்காவில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.