முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்று வந்தது அவருக்கு நல்ல சுற்றுலா அனுபவமும், ஓய்வும் கிடைத்திருக்கிறது. இதைத்தவிர தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை.
வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பதை காட்டிலும் தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு உரிய சலுகை வழங்கினாலே பல தொழில்கள் மேம்படும்.

மத்திய அரசின் நடவடிக்கையால் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகளை கொண்ட தொழில் நிறுவனங்கள் தங்களது நாட்டுக்கே திரும்பி செல்லும் நிலை உள்ளது.
தற்போதும் ஜாதிய பாகுபாடு இருப்பது வேதனை அளிக்கிறது. ஜாதிகளின் அடிப்படையில் மயானம் இருக்கிறது. நகரங்கள், கிராமங்களில் பொது மயானங்கள் அமைக்க மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் நீர்மேலாண்மை முறையாக இல்லாததால் குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்படும் நிதியால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் கவர்னர் காலதாமதம் ஏற்படுத்துவதாக கருத முடியாது. அவர் மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பதால் 7 பேர் விடுதலைக்கு மத்திய அரசே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

