ஓய்ந்து கொண்டிருக்கும் குரல்!

294 0

ஆகஸ்ட் 30ஆம் திகதி, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் நாள் உல­க­ளா­விய ரீதி­யாக நினைவு கூரப்­பட்ட போது இலங்­கை­யிலும் மூன்று இடங்­களில்-  வடக்கில் ஓமந்­தையில், கிழக்கில் கல்­மு­னையில் கொழும்பில் கோட்டை ரயில் நிலையம் முன்பாகவும் முக்கியமான போராட்­டங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

இலங்­கையில் தெற்­கிலும், வடக்கு, கிழக்­கிலும் வெவ்­வேறு கால­கட்­டங்­களில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை இலட்­சத்­துக்கும் அதிகம்.

1971 மற்றும் 1987–-90 ஜே.வி.பி கிளர்ச்­சி­களின் போது, பல ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்கள், காணாமல் ஆக்­கப்­பட்­டனர். அவர்­களைத் தேடும் போராட்­டங்கள், கடந்த நூற்­றாண்டின் இறுதி தசாப்­தத்தில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருந்த போதும், இந்த நூற்­றாண்டில் அது மறக்­கப்­பட்ட விட­ய­மாகி விட்­டது.

வடக்கு, கிழக்கில் முப்­ப­தாண்­டுகள் நீடித்த ஆயுதப் போராட்டம், 2009இல் முடி­வுக்கு வரப்­பட்ட போது, ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் காணாமல் ஆக்­கப்­பட்­டனர் என்று தக­வல்கள் கூறு­கின்ற போதிலும், இது­தொ­டர்­பான சரி­யான பதி­வு­களோ, எண்­ணிக்­கை­களோ யாரி­டமும் இல்லை.

பலர் குடும்­பங்­க­ளா­கவே காணாமல் ஆக்கப்­பட்­டுள்­ளனர், உரித்­து­களும் உற­வு­களும், பின்னர் உயி­ரி­ழந்து போனது, இடம்­பெ­யர்ந்து வெளி­நா­டு­க­ளுக்குச் சென்­றது போன்ற பல்­வேறு கார­ணங்­களால், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பல­ரது பதி­வுகள் இன்­னமும் கூட சரி­யான கணக்­கெ­டுப்­புக்குள் வர­வில்லை.

வடக்கு, கிழக்கு, தெற்கில் இலட்­சக்­கணக் கா­ன­வர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருந்த போதும். கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி நடந்த கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களில் பங்­கெ­டுத்­த­வர்­களின் மொத்த எண்­ணிக்கை ஆயி­ரத்தை தாண்­டுமா என்­பது சந்­தேகம் தான்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள், 900 நாட்­களைக் கடந்தும் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்ற போதும், இந்தப் பிரச்­சினை மீதான கவனம் குறைந்தே வரு­கி­றது,

போராட்­டங்­களில் ஈடு­ப­டுவோர், தீர்வு கிட்­டாது என்ற சலிப்பில் ஒதுங்கத் தொடங்­கி­யுள்­ளனர். பலர் இறந்து விட்­டனர். இன்னும் பல உற­வுகள் நோயுடன் போராடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அது­மாத்­தி­ர­மன்றி வறுமை, அடுத்­த­வேளை உண­வுக்­கான போராட்டம், நீதி கிட்டும் என்ற நம்­பிக்கை தொலைந்து போய் விட்­டது என்­பன போன்ற கார­ணி­களால், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் சோர்­வ­டையத் தொடங்­கி­யுள்­ளனர்.

இது நீதியை எதிர்­பார்த்­தி­ருக்கும் சமூ­கத்­துக்கு பேரி­டி­யான ஒரு விடயம். அதே­வேளை நீதியை மறுக்கும், அநீ­திக்கு கார­ண­மான சமூ­கத்­துக்கு கிடைத்த வெற்­றி­யா­கவும் கரு­தப்­ப­டு­கி­றது.

இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்த காலத்­தி­லி­ருந்து, பல­நூறு போராட்­டங்­களை நடத்­தியும் கூட, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பட்­டி­யலில் உள்ள ஒரு­வ­ரையும் கண்­டு­பி­டிக்­கவோ, அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை அறிந்து கொள்­ளவோ முடி­யாத விட­ய­மா­கவே இருக்கிறது.

இந்த சலிப்பு, காணாமல் ஆக்­கப்­பட்­டோரைக் கண்­டு­பி­டிப்­ப­தற்­கான அர­சாங்க பொறிமுறைகள் மீதான நம்­பிக்­கை­யீ­ன­மாக வெளிப்­பட்டு வரு­கி­றது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் நிலையை கண்­ட­றி­வது, இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­க­ளுக்கு ஒரு பதிலைக் கூறு­வது, அவர்­க­ளுக்­கான இழப்­பீ­டு­களைப் பெற்றுக் கொள்­வது ஆகிய நோக்­கங்­களை முன்­வைத்து, காணாமல் போனோ­ருக்­கான பணி­யகம் உருவாக்கப்பட்டது.

கடு­மை­யான சவால்கள், அழுத்­தங்கள், போராட்­டங்­க­ளுக்குப் பின்னர் தான் சுதந்­தி­ர­மான இந்தப் பொறி­முறை உரு­வாக்­கப்­பட்­டது. ஐ.நாவின் உத­விகள், ஆலோ­ச­னை­களின் பேரில் உரு­வாக்­கப்­பட்ட இந்த பணி­ய­கத்தை தமது சாத­னை­களில் ஒன்­றாக தற்­போ­தைய அர­சாங்கம் கூறி வந்­தி­ருக்­கி­றது,

ஆனால், இவ்­வா­றான பொறி­மு­றையை பாதிக்­கப்­பட்­ட­வர்கள் நம்­பு­கின்ற நிலையில் இல்லை என்­பதே இப்­போ­துள்ள முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது.

கடந்த மாதம் யாழ்ப்­பா­ணத்தில் காணாமல் போனோ­ருக்­கான பணி­ய­கத்தின் பிராந்­திய கிளை செய­லகம் திறக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டது.

உட­ன­டி­யா­கவே, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள், அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர். அந்த செய­லகம் திறக்­கப்­பட்டால் அதற்கு எதி­ராகப் போராட்­டங்­களை நடத்தப் போவ­தாக அறி­வித்­தனர்.

இந்த நிலையில், யாரும் எதிர்­பா­ராத வகையில், திடீ­ரென அதி­கா­லை­யி­லேயே அந்த செய­ல­கத்தை திறந்து விட்டு அதி­கா­ரிகள் ஓடி மறைந்­தனர்.

காணாமல் போனோ­ருக்­கான செய­ல­கமே, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­க­ளுக்கு பயந்து ஓடி ஒளியும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது,

ஆகஸ்ட் 30ஆம் திகதி அந்த பிராந்­திய செய­ல­கத்­துக்கு முன்­பா­கவும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் சிலர் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டிக்க, என்ற நோக்­கத்­துக்­காக உரு­வாக்­கப்­பட்ட இந்த பணி­யகம்,  இது­வரை அதற்­கான முயற்­சி­களை மேற்­கொள்ள முடி­ய­வில்லை. அதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யீனம் ஏற்பட்டு விட்­டது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் நிலையைக் கண்­ட­றி­வது ஒரு சில நாட்­களில் முடியும் வேலை அல்ல, அது ஆண்­டுக்­க­ணக்கில் நடக்கக் கூடி­யது என்ற நியாயம் ஏற்­றுக்­கொள்ளக் கூடி­யது தான். அது மட்டும் தான் பிரச்­சினை என்­றில்லை.

இந்தப் பணி­ய­கத்­துக்கு சட்­ட­ அ­தி­காரம் கிடையாது, குறைந்­த­பட்சம் இதன் பரிந்­து­ரை­களைக் கூட அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற கட்­டா­யமும் இல்லை. இது பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நம்­பிக்கை அளிக்கக் கூடிய ஒன்­றாக இல்லை. அர­சாங்கம் இந்த விட­யத்தில் பொறுப்­புடன் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை.

காணாமல் போனோ­ருக்­கான பணி­யகம் உரு­வாக்­கப்­பட்ட பின்னர், அர­சாங்­கத்­துக்கு இடைக்­கால பரிந்­து­ரை­களைச் செய்­தி­ருந்­தது. அதில், பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு இடைக்­கால நிவா­ரணக் கொடுப்­ப­ன­வு­களை வழங்கும் பரிந்­துரை தவிர, ஏனைய பரிந்­து­ரை­களை நடை­முறைப்படுத்த அர­சாங்கம் முன்­வ­ர­வில்லை.

குறிப்­பாக, காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று குற்றஞ்சாட்டப்­படும் பொலிஸ் மற்றும் முப்­படை அதி­கா­ரி­க­ளுக்­கான, பதவி உயர்­வுகள், புதிய நிய­மனங்களை நிறுத்தி வைக்குமாறு பரிந்­து­ரைத்­தி­ருந்த போதும், அதனை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­ள­வில்லை.

இது பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பெரும் ஏமாற்­றத்­தையும் நம்­பிக்­கை­யீ­னத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று காணாமல் போனோ­ருக்­கான பணி­ய­கத்தின் தலை­வ­ரான கலா­நிதி சாலிய பீரிஸ் தெரி­வித்­துள்ளார்.

நாவற்­கு­ழியில் இளை­ஞர்­களை கைது செய்து காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் என்று குற்­றம்­சாட்­டப்­பட்ட மேஜர் ஜெனரல் துமிந்த கெப்­பிட்­டி­வ­லன்­ன­வுக்கு பதவி உயர்­வுகள் கொடுக்­கப்­பட்­டன. இப்­போது அவர் ஓய்­வு­பெற்று விட்டார். அவ­ருக்கெதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள ஆட்­கொ­ணர்வு மனு வழக்கில் அவ­ருக்­காக சட்­டமா அதிபர் தரப்பே முன்­னி­லை­யா­கி­றது.

அது­போல, இறு­திப்­போரில் சர­ண­டைந்த பின்னர் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பாக குற்­றம்­சாட்­டப்­படும், 58 ஆவது டிவி­சனின் கட்­டளை அதி­கா­ரி­யாக இருந்த லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா இப்­போது இரா­ணுவத் தள­ப­தி­யாக உயர்ந்து விட்டார்.

இது­போன்று கடற்­படை, பொலிஸ், இரா­ணு­வத்தில் குற்­றம்­சாட்­டப்­படும் பல அதி­கா­ரிகள் தொடர்ந்து பதவி உயர்­வு­களைப் பெற்று வரு­கி­றார்கள். அதனை தடுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலை­யினால் தான், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மத்­தியில், ஒரு வித சோர்வும், இனி நீதியே கிடைக்­காது என்ற சலிப்பும் நம்­பிக்­கை­யீ­னமும் ஏற்­பட்­டுள்­ளது. இந்த நம்­பிக்­கை­யீ­னத்­தையோ சலிப்­பையோ பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டத்தில் இருந்து இனிமேல் நீக்­கு­வது கடினம்.

இவ்­வா­றான நிலையில், தமது தரப்பு ஆட்­சிக்கு வந்தால், காணாமல் போன­வர்­களின் பிரச்­சி­னைக்கு தகுந்த பதில் அளிக்­கப்­படும் என்­றொரு வாக்­கு­று­தியைக் கொடுத்­தி­ருக்­கிறார் வாசு­தேவ நாண­யக்­கார.

அவர் இப்­போது, கோத்­தா­பய ராஜபக் ஷவை, ஜனா­தி­ப­தி­யாக்க முயற்­சிக்­கின்ற அணியில் இடம்­பெற்­றி­ருக்­கிறார்.

அவர் அங்கம் வகிக்­கின்ற கூட்­ட­ணியின் ஆட்­சிக்­கா­லத்தில் தான், அதி­க­ளவு காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் வடக்கு, கிழக்கில் நிகழ்ந்­தி­ருந்­தன. அதுவும், 2005 தொடக்கம், 2010 வரை­யான காலப்­ப­கு­தியில், கோத்­தா­பய ராஜபக் ஷ பாது­காப்புச் செய­ல­ராக இருந்­த­போது தான், அந்தச் சம்­ப­வங்கள் அதி­க­ளவில் இடம்­பெற்­றன.

அதனை வெள்ளை வான் கலா­சாரம் அறிமுகப் ப­டுத்­தப்­பட்ட காலம் என்றும் கூறலாம்.

இந்தக் கால­கட்­டத்தில் கடத்­தப்­பட்டும், கைது செய்­யப்­பட்டும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று பதில் கூற வேண்­டிய கடப்­பாடு அவர்­க­ளுக்கு இருக்­கி­றது. அதனை அவர்கள் வெளிப்­ப­டுத்­து­வார்­க­ளாயின், அது வர­வேற்­கத்­தக்­கது.

காணாமல் போன­வர்கள் எவரும் உயி­ருடன் இல்லை என்­பது அவர்­களின் உற­வி­னர்­க­ளுக்கே தெரியும் எனவும், இது­பற்றி சர்­வ­தேச விசா­ரணை சாத்­தி­ய­மில்லை, அவர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு கொடுத்து அவர்­களின் பிரச்­சி­னையை கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யா­னதும் தீர்த்து வைப்பார் என்றும், வர­த­ரா­ஜப்­பெருமாளும் கூறி­யி­ருக்­கிறார்.

ஆனால், என்ன நடந்தது என்ற பதில் மாத்திரமோ, நஷ்ட ஈடோ இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக இருக்க முடியாது. நஷ்ட ஈட்டை ஏற்றுக் கொள்ளுமாறு  முன்னரும் பலமுறை அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு இணங்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அதற்கு என்ன காரணம்? அதற்கு காரணமானவர்கள், உத்தரவிட்டவர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட வேண்டும்.

வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம் என்றோ, என்ன நடந்தது என்று கூறுவோம் என்றோ தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பது நம்பக்கூடியவையன்று.

இதுபோன்ற வாக்குறுதிகள் தற்போதைய அரசாங்கத்தினாலும் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், மீண்டும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இல்லை.  அவர்கள் சோர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குரல் இப்போது ஓய்ந்து கொண்டிருக்கிறது.

என் .கண்ணன்