காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிய தந்தை உயிரிழப்பு

492 0

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03) உயிரிழந்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளை உறவுகளை தேடி வடக்கு கிழக்கில் 900 நாட்களை கடந்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 08.03.2017 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆனது இன்று 912 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் தொடர் போராட்டத்தில் தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது மகன் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தனது மகனான நாகராசா நகுலேஸ்வரன் என்பவரை தேடி வந்த ஏழாம் வட்டாரம், சிவநகர், புதுகுடியிருப்பைச் சேர்ந்த சின்னையா நாகராசா என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அவரது இல்லத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

தமது உறவுகளை தேடி காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்த 900 நாட்களில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 17 பெற்றோர்கள் உயிரிழந்துள்ளதுடன், வடக்கு கிழக்கில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.