வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா!

272 0

வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.

சர்ச்சைக்குரிய வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது.

இந்நிலையில், பத்து நாட்கள் தொடர்ந்து திருவிழா இடம்பெற்று எதிர்வரும் 13ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் நிறைவுபெறவுள்ளது.

ஆலயத்தின் பிரதான பூசகர் மதிமுகராசா தலைமையில் இன்றைய பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதன்போது நெடுங்கேணி பொலிஸார் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்ததோடு, ஒலிபெருக்கி பாவனை தடை செய்யப்பட்டிருந்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அத்தோடு, ஆலயத்திற்கு செல்லும் வீதியை செப்பனிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆலயம் அமைந்துள்ள பகுதியில் கழிவுப்பொருட்களை எரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் மரங்களில் தடிகளை வெட்டவும் அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அதேநேரம் குறித்த ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் பல தடவைகள் வருகைதந்து பொங்கல் நிகழ்வினை பார்வையிட்டு சென்றதாகவும் இந்த விடயம் அங்கு வருகைதரும் பக்தர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.