திடீரென மூடப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையை மீளவும் திறப்பதற்கு மலையக தொழிலாளர் முன்னணியின் பதுளை பிராந்தியம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையடுத்து எட்டு மாதங்களுக்கு பின் வெற்றி கிடைத்துள்ளது.
பதுளைப் பகுதியின் ரொக்கத்தன்னை பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்சாலை தோட்ட நிருவாகத்தினால் கடந் தபெப்ரவரி மாதம் முதலாம் திகதி திடீரென்று மூடப்பட்டது. இதனை ஆட்சேபித்து ரொக்கத்தன்னை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இரு தினங்கள் பணிப்பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் உத்தரவின் பேரில், மலையகதொழிலாளர் முன்னணியின் பதுளைப் பிராந்திய தொழிலுறவு அதிகாரி எஸ்.பி. வெங்கடாசலம், பதுளை உதவித்தொழில் ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பலசுற்று சுமூக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் பயன்கிடைக்கவில்லை.
இறுதியாக மேற்படி தோட்டத்தை பொறுப்பேற்றிருக்கும் ஹப்புகஸ்தன்னை பிளான்டேசன் நிறைவேற்று அதிகாரியையும் பதுளை உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து நேற்று நடைபெற்ற இறுதிப் பேச்சுவார்த்தையின் போது தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது.
அம் முடிவிற்கமைய இம் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 30 ந்திகதிற்குள் (செப்டெம்பர்-2019) குறித்ததேயிலை தொழிற்சாலையை மீளவும் திறப்பதற்கு தோட்டத்தை பொறுப்பேற்றிருக்கும் கம்பனி நிருவாகம் தோட்ட நிருவாகம் பதுளை உதவித் தொழில் ஆணையாளர் ஆகியோர் பூரண இணக்கப்பாட்டை தெரிவித்தனர்.

