நாங்குனேரி தொகுதியில் யார் போட்டி? முக ஸ்டாலின் பேட்டி

214 0

நாங்குனேரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஆண்டு தோறும் அவரது சொந்த ஊரான சிவகிரி தாலுகாவில் உள்ள நெற்கட்டும் செவலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 304-வது பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மாவீரன் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன். இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகளவில் சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளனர். தமிழகம்தான் இதில் முன்னோடி மாநிலமாக உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் தி.மு.க. ஆட்சியில் தான் மணி மண்டபங்கள் கட்டப்பட்டன.

நிர்மலா சீத்தாராமனின் வங்கி இணைப்பு முயற்சி எந்த அளவுக்கு பயன்கொடுக்கும் என்று தெரியாது. ஆனால் அனைத்து வங்கி ஊழியர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் முதல்-அமைச்சரும், மற்றும் 10 அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்கள். மேலும் 8 அமைச்சர்கள் சுற்றுப்பயணம் போக உள்ளார்கள். இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அனைவரும் பொழுது போக்கிற்காக சுற்றுலா செல்வது போல் வெளிநாட்டிற்கு போய் உள்ளார்கள்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 2 முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதன் மூலம் ரூ. 5.5 லட்சம் கோடி தொழில் தொடங்க உள்ளார்கள் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது. இதன் உண்மை நிலை என்ன என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியினர் அவரவர் கருத்துகளை கூறி வருகிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி யார் போட்டியிடுவது என்று முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.