பா.ஜனதா புதிய தலைவர் டிசம்பர் மாதம் அறிவிப்பு- பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

290 0

தமிழக பா.ஜனதா புதிய தலைவர் டிசம்பர் மாத இறுதியில் நியமிக்கப்பட உள்ளார் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டது குறித்து தங்களது கருத்து என்ன?

பதில்:- பா.ஜனதா கட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில தலைவராக சிறப்பாக பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிதாக மராட்டியம் உள்பட 4 மாநிலங்களுக்கும் கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கே:-உங்களுக்கு கவர்னர் பதவி தரப்படும் வாய்ப்பு உள்ளதா?

ப:- இதுகுறித்து ஏற்கனவே பல முறை பதில் தெரிவித்துள்ளேன்.

கே:-தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளதால் தமிழக பா.ஜனதா தலைவராக நீங்கள் நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா?

ப:- அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. டிசம்பர் மாத இறுதியில் தமிழக பா.ஜனதா புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார்.

கே:- தற்போது வங்கிகள் இணைப்புக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே?

ப:- 1969-ம் ஆண்டு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது அதனை வரவேற்றனர். தற்போது வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

கே:-அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டர்களுக்கு பதவிகள் வழங்கப்படுகிறது. அதேபோன்று பா.ஜனதாவிலும் வழங்கப்படுமா?

ப:- பா.ஜனதாவை மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.

கே:- முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் குறித்து….?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ப:-வெளிநாடு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரவே வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். அதனை விமர்சனம் செய்வது சரியல்ல. அவரது பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.