மராட்டியனா? மானத் தமிழனா? ரஜினிக்கு சீமான் சவால்

386 0

ரஜினி அரசியலுக்கு வருவதாக நீண்ட காலமாகவே கூறிக் கொண்டிருக்கிறார். அவர் வரட்டும். நாங்கள் தயாராக இருக்கிறோம். மராட்டியனா? மானத் தமிழனா? என்று பார்த்து விடுவோம் என்று சீமான் சவால் விடுத்துள்ளார்.

 

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகப்போகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினி, இன்னும் புது கட்சியை தொடங்கவில்லை. ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வரும் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியே இருந்தார். வருகிற சட்டசபை தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வரும் ரஜினி அதற்கு முன்னதாக புதிய கட்சிக்கான அறிவிப்பையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். “தமிழ்நாட்டை இனி தமிழரே ஆள வேண்டும்“ என்றும், மற்ற மாநிலத்தவர்கள் மீண்டும் தமிழகத்தை ஆள நினைப்பதை அனுமதிக்க மாட்டோம்“ என்றும் மேடைக்கு மேடை பேசிவரும் சீமான், ரஜினி வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அவர் அரசியலுக்கு வந்தால் அதனை எதிர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் நடைபெற்ற செங்கொடி நினைவு நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய சீமான் ரஜினிக்கு மீண்டும் சவால் விடுத்து பேசினார். அவர் பேசியதாவது:-

ரஜினி அரசியலுக்கு வருவதாக நீண்ட காலமாகவே கூறிக் கொண்டிருக்கிறார். அவர் வரட்டும். நாங்கள் தயாராக இருக்கிறோம். மராட்டியனா? மானத் தமிழனா? என்று பார்த்து விடுவோம். அவரது வருகைக்காக காத்திருக்றேன். ஐ.ஆம். வெயிட்டிங்.

இந்த உலகில் வெல்ல முடியாத அரசுகளோ, படைகளோ கிடையாது. முகலாயப் பேரரசு சோழ பேரரசு என பல பேரரசுகள் விழ்ந்துள்ளன. பல சாம்ராஜ்யங்கள் சரிந்துள்ளன.

இன்றைய அரசுகள் மக்கள் விரோத போக்குடனேயே உள்ளன. தான் படிக்கா விட்டாலும், மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று எண்ணி பாடுபட்ட காமராஜர் போன்ற தலைவர் இப்போது உண்டா? மத்தியில் 2-வது முறையும் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜனதா அரசு வீழ்த்த முடியாத அரசு அல்ல. இந்த ஆரிய சாம்ராஜ்யமும் விரைவில் வீழும்.

ரஜினிகாந்த்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுமே வீழ்த்தப்பட வேண்டிய கட்சிகள்தான். நான் தோற்கவில்லை. மக்கள்தான் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். பொது தேர்தல் நெருங்கி விட்டது. அதற்கான களப்பணியை இப்போதே தொடங்க வேண்டும். வெல்ல வேண்டும்.

எப்போதும் ஒரு பிரச்சினை வரும் போது இன்னொன்று மறந்து போகும். 47 நாட்கள் அத்திவரதரை தரிசிக்க மக்கள் அலை மோதினார்கள். திருப்பதியில் சென்று பணத்தை கொட்டிய நம் சொந்தங்கள், காஞ்சீபுரத்தில் அத்தி வரதரிடமும் சென்று பணத்தை போட்டார்கள். அந்த வகையில் சந்தோ‌ஷம்தான்.

பள்ளி மாணவர்களின் சாதி கயிறு விவகாரத்தில் பா.ஜனதா அழுத்தத்தால் தமிழக அரசு மாற்றி மாற்றி பேசியது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசுக்கு அஞ்சாத அரசை தமிழகத்தில் நிச்சயம் நாம் தமிழர் கட்சி அமைக்கும்.

இவ்வாறு சீமான் பேசினார்.