“தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்”!

408 0

இந்த நாட்டில் அரசியல் தீர்வு விடயங்களில் அரசாங்கம் அக்கறை செலுத்தாமையே அளவுக்கதிகமாக ரத்தக்கறை படிய காரணமாக மாறியது. தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளில் தலையிட நாம் தயார். வடக்கு கிழக்குக்கு அப்பால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தமிழர்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்றால் சந்தேகத்திற்கு அப்பால் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரியுங்கள்.

“வடக்கு – கிழக்கு மக்களினால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தெரிவுசெய்ய வேண்டும் என்றால் மக்கள் விடுதலை முன்னணியையே தெரிவுசெய்ய வேண்டும். தெற்கின் கட்சியொன்றை தமிழ் மக்கள் நம்புவதென்றால் மக்கள் விடுதலை முன்னணியே ஒரே தெரிவு.”

தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜே.வி.பி. முழுமையான முயற்சிகளை முன்னெடுக்கும் என `தேசிய மக்கள் சக்தி` கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜேவிபி  தலைவருமான அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

“பாராளுமன்றத்தில் சகலரதும் முழுமையாக இணக்கம் எட்டப்படும் நிலையில்  நிறைவேற்று அதிகாரத்தை நீக்க நாம் முன்வருவோம். நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். “

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர்  இதனைக் குறிப்பிட்டார்.  அவருடனான செவ்வியின் முழுவிபரம் வருமாறு :

கேள்வி:ஆகஸ்ட் 18ஆம் திகதி காலிமுகத்திடலில் மக்கள் பெருந்திரளானோர் முன்னி லையில் உங்களை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த அந்த தருணத்தில்  உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது?

பதில்:- இந்த நாட்டின் ஆட்சி முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்ற மக்களின் அக்கறை, மற்றும் மாற்றமொன்று உருவாக வேண்டும் என்பதற்காக என்மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை என்பவற்றை நான் அவதானித்தேன். அதுமட்டு மல்லாது மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீணடிக்காது மக்களின் எதிர்பார்ப்பு, வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பிக்கையே எனக்கு மக்களை பார்க்கையில் தோன்றியது.

கேள்வி: 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி.ஜனாதிபதி தேர்தலில் தனித்து களமிறங்கி யுள்ளது. இதில் நீங்கள் எவ்வாறான போராட்டம் ஒன்றை  எடுத்துள்ளீர்கள்?

பதில்:-கடந்த 2005, 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் எமது நாட்டின் அப்போதைய தன்மைகளுக்கு அமைய ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்றன. அப்போது அரசியல் ரீதியில் எம்மால் எவ்வாறான தீர்மானம் எடுக்க வேண்டுமோ       அவற்றை நாம் முன்னெடுத்தோம். எமது நாட்டுக்கு  இனியும் தேவைப்படுவது சிறியசிறிய தற்காலிக மாற்றங்கள் அல்ல. இன்று சமூகத் தில் முழுமையான மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது. இந்த மாற் றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் தூய்மையான அரசியல் தலை

மைத்துவம் ஒன்று தேவைப்படு கின்றது. அதற்காக முன்வரும் மக்களை கொண்ட சக்திகளை ஒன்றிணைத்து மாற்றத்தை உரு வாக்க நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

கேள்வி: 2005 ஆம் ஆண்டில் இருந்து பார்த்தால் தொடர்ச் சியாக மக்கள் விடுதலை முன்னணியின் பலம் குறை வடைந்ததை பார்க்க முடிந் தது. உங்கள் மீதான மக்களின்  எதிர்பார்ப்பும் குறைந்தது. இப்போது நீங்கள் எடுத்துள்ள போராட்டம் தேர்தலை வெற்றிகொள்ள வேண்டும் என்ற நோக்கமா அல்லது உங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள நீங்கள் கையில் எடுத்துள்ள திட்டமா?

பதில்:-கடந்த காலங்களில் எம்மால் எடுக்கப்பட்ட தீர்மா னங்கள் அப்போது நாட்டு  மக் கள் சந்தித்த சவால்களை வெற்றிகொள்ள எடுக்கப்பட்ட தீர்மானமாக அமைந்தது. எனினும் இந்த செயற்பாடு காரணமாக கட்சி மீதான தெளிவின்மை மக்கள் மத்தியில் உருவாகியது உண்மை.

எனினும் அந்தக் காலங்களில் நாம் ஏன் அவ்வாறான தீர்மானங்களை எடுத்தோம், நாம் அவ்வாறு தீர்மா னங்களை எடுக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கலந்துரையாடல் ஒன்றை சமூகத்தில் கொண்டுசென்றோம். இப்போது நாம் எடுத்துள்ள முயற்சி கடந்த கால பின்னடைவை மறைக்க எடுக்கும் முயற்சி அல்ல.

எமது நாட்டில் மாற்று அரசியல் புரட்சி ஒன்று வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதனை வெற்றிகொள்ள உறுதியாக எடுக்கும் முயற்சி. ஆகவே நல்ல முடிவுகளை எதிர்பார்த்தே நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளோம். இந்த நாட்டில் இன, மத பேதமின்றி கஷ்டப்படும் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த நம்பிக்கையின் மூலமாக வெற்றி பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் களமிறங்கியுள்ளோம்.

கேள்வி: சாதாரணமாக மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டங்களை, பேரணிகளை ஏற்பாடு செய்வதில் ஏனைய அரசியல் கட்சிகளை விடவும் செயற்திறன்மிக்கவர்கள். ஆனால் தேர்தல் என்று வந்தால் உங்களுக்கு அவ்வளவு வாக்குகள் கிடைப்பதில்லையே?

பதில்:-நீங்கள் கூறுவது உண்மை தான். அரசியல் ரீதியில் நாம் செய்யும் வேலைத்திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். மே தினக் கூட்டமாக இருந்தாலும், மக்களை ஒன்றிணைத்து நடத்தும் கூட்டங்களாக இருந்தாலும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டாலும் பாராளுமன்றத்தில் உரையாற் றும் போதும் மக்களின் பிரச்சினை களில் தலையிடும் போதும் நாம் சரியாக எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். எதிர்க்கட்சியாக நாம் சரியாக எமது கடமையை செய்து வருகின்றோம். நாம் மக்களுக்கு கூறுவது என்னவென்றால் இப்போது நாம் முன்னெடுத்த சகல வேலைத்திட்டங்களை போலவே எம்மை நம்பி எமக்கு அரசாங்கத்தை ஒப்படைத்தால் எமது அரசாங்கத்தையும்  அவ்வாறே நடத்திக்காட்டுவோம்.

என்றாலும் நீங்கள் கூறுவதைப்போல நாம் என்னதான் நேர்மையாக அரசியல் செய்தாலும் எம்மை நம்பி வாக்களிக்க இன்றும் மக்கள் மத்தியில் சில பின்னடைவு உள்ளது. அது உண்மையே. ஆனால் நாம் ஒரு தலைவருக்காக இன்னொரு  தலைவரை உருவாக்கவோ ஒரு அரசாங்கத்திற்காக இன்னொரு அரசாங்கத்தை மாற்றவோ முன்வரவில்லை. கடந்த 71 ஆண்டுகளாக இந்த நாட்டில் உள்ள மோசமான கொள்கையை மாற்றியமைக்கவே நாம் முயற்சிக் கின்றோம். எமது நாட்டின் பொரு ளாதாரக் கொள்கையில் இருந்து விடுபட்டு மாறுபட்ட கொள்கை ஒன்று வேண்டும். மிகவும் கீழ்த்தரமான, மோசமான அரசியல் கொள்கைக்கு அப்பால் தூய்மையான அரசியல் கொள்கை ஒன்று வேண்டும்.

தனிப்பட்ட நலன்களை கருத்தில் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளுக்கு அப்பால் பொதுவாக மக்கள் குறித்து சிந்திக்கும் கொள்கை ஒன்று வேண்டும். சமூக, அரசியல், பொருளாதார, மறுமலர்ச்சி ஒன்று வேண்டும். அந்த மறுமலர்ச்சிக்காகவே நாம் பாடுபடுகின்றோம். இவ்வாறான மறுமலர்ச்சி உலக வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் இடம்பெற்றவை அல்ல. நீண்ட ஆண்டுகளுக்கு பின்னரே அவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே இந்த மாற்றத்தை எம்மால் செய்யமுடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இந்நிலையில் மக்கள் மாறத் தயாரில்லை என்றால், மக்கள் தொடர்ந்தும் தமது பழைய நிலைப்பாட்டில் இருந்தால்  இந்த மாற்றத்தை உருவாக்க  முடியாது. ஆனாலும் மக்கள் எம்மை நம்பி ஆதரிப்பார்கள் என்ற உறுதியான  நம்பிக்கையில் நாம் செயற்படுகின்றோம்.

கேள்வி: இடதுசாரிகள் என்ற காலாவதியான ஒரு கொள்கையில் நீங்கள் முன்னோக்கி செல்லும்போது மக்கள் உங்கள் மீது நம்பிக்கை  வைப்பார்கள் என நினைக்க முடியுமா?

பதில்:இடதுசாரிகள் என்று கூறியவுடன் உலகத்திலும் சரி இலங்கையிலும் சரி தவறானதும் அச்சமானதுமான படம் ஒன்று வரையப்பட்டுள்ளது. இன்று கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கையை மாற்றி வேறு பொருளாதார கொள்கையொன்று வேண்டாமா? தமிழ், சிங்கள, முஸ்லிம் என எந்த இனத்தவராவது இன்றுள்ள பொருளாதார கொள்கையை ஏற்றுக்கொள்கின் றார்களா? கீழ்மட்டத்தில் வாழும் எவருக்கு இந்த பொருளாதார கொள்கை நலன்களை கொடுத்துள்ளது? யாருக்கும் இதில் நன்மை இருக்காது.

ஆகவே நாம் இந்த பொருளாதார கொள்கையில் மாற்றத்தை முன்வைக்கின்றோம். இதுதான் இடதுசாரி. இந்த நாட்டின் அரசியலை யார் ஏற்றுக்கொள்கின்றனர்.

வியாபாரமாக மாறியுள்ள, ஊழல், மக்கள் சொத்துக்களை சூறையாடும் அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதற்குப்பதிலாக ஒழுக்கமான அரசியலை மக்கள் கேட்கின்றனர். இதுதான் இடதுசாரிக்கொள்கை. சமூகத்தில் மாற்றம் ஒன்றினை மக்கள் விரும்புகின்றனர் இதுதான் இடதுசாரிக்கொள்கை. ஆகவே இடதுசாரிகள் குறித்து மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

இன்று கடைப்பிடிக்கும் கொள்கைக்கு எதிராக மக்கள் நிலைப்பாடு ஒன்று உள்ளது. அதனை கையாளவே நாம் முயற்சிக்கின்றோம். மாற்றம் ஒன்று வேண்டும் என்று மக்கள் நினைத்தால் மட்டும் போதாது. அனைவருமே மாற்றம் வேண்டும் என  நினைக்கின்றனர். ஆனால் என்ன மாற்றம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். மாற்றத்தின் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த மாற்றத் தையே நாம் முன்கொண்டு செல்கின்றோம்.

கேள்வி: நீங்கள் மாற்றம் குறித்துப் பேசினாலும்  வேலைத்திட்டம்  எதனையும் முன்வைக்கவில்லையே?

பதில்:அரசியல் ரீதியில் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் மிகவும் பலமாக வேலைத்திட்டங்களை நாம் உருவாக்கியுள்ளோம். கடந்த 2000 ஆம் ஆண்டில் நாட்டை கட்டியெழுப்பும் ஐந்தாண்டுகால வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்தோம். அதுதான் இன்றுவரை வெற்றிகரமான திட்டமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டும் தேசிய மனசாட்சி என்ற திட்டத்தை முன்வைத்தோம்.

அதில் பல ஆரோக்கியமான வேலைத்திட்டங்கள் உள்ளன எனினும் ஜே.வி.பி. பேச்சு  மட்டுமே, ஒன்றும் செய்வதில்லை என்ற நிலைப்பாடும் மக்கள் மத்தியில் உள்ளது.

மக்கள் எப்போதும் மக்கள் விடுதலை முன்னணியை விமர்சிக்கும் கட்சியாகப் பார்த்தனரே தவிர நிவர்த்திசெய்ய நாம் எவ்வளவு தான் கூறினாலும் அது குறித்து கவனித்ததில்லை.   கடந்த காலங்களில் கூட நாம் பல வேலைத்திட்டங்களை முன்வைத்தோம். எம்மிடம் ஆரோக்கியமான வேலைத்திட்டம் உள்ளது. வேலைத்திட்டத்துடன்தான் நாம் களமிறங்கியுள்ளோம். எமது பொருளாதாரம் இன்று ஐம்பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது.

கடன், ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள நெருக்கடி, உற்பத்தி வீழ்ச்சி, அரச வருமானம் இல்லாமால்போயுள்ளமை, வருமானம் நியாயமாக பகிரப்படாமை என்ற இந்த ஐந்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்தால் மட்டுமே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

அதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நாட்டின் சேவைகள் உறுதியானதாக இருக்க வேண்டும். எனினும் வீட்டுக்கு கிடைக்கும் வருமானத்தில் அதிக தொகையை கல்விக்கும், சுகாதாரத்திற்கும், போக்குவரத்திற்கும் செலவழிக்க வேண்டியுள்ளது. சேவைகளை இலகுபடுத்த வேண்டும். மக்களின் பொருளாதார நெருக்கடி மிகவும் முக்கியமான பிரச்சினை. வடக்கில் அநேக மக்கள் கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கடன் நெருக்கடியில் உள்ளனர். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணாது அவர்களை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது, தோட்டத்தொழிலாளர் சேவைகளைப் பலப்படுத்தாது மலையக மக்களின் வாழ்க்கையை முன்னோக்கிக்கொண்டுசெல்ல முடியாது. இவ்வாறு மக்களின் பொருளாதார தன்மையை உயர்த்துவதன் மூலம் மட்டுமே அவர்களை பாதுகாக்க முடியும்.

இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்கும் திட்டம் எம்மிடம் உள்ளது. வேலைத்திட்டங்களை யாராலும் முன்வைக்க முடியும். ஆனால் அதுமட்டும் போதாது. அதனை செய்துமுடிக்கும் அணியொன்று வேண்டும். நாம் அரசியலில் சம்பாதிக்க அரசியல் செய்யவில்லை. ஜனாதிபதி தேர்தலில் மட்டும் அல்ல நாட்டுக்கான சரியான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எம்முடன் வேலை செய்யும் மக்கள் ஏராளமாக உள்ளனர். மாயாஜாலக்காரர்களால்  நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

கேள்வி:கடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ அணியை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் பொது அணியில் நீங்களும் செயற்பட்டீர்கள், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளையே நீங்கள் பங்கிடப்போகின்றீர்கள் என்ற கணிப்புகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்: இந்த நாட்டில் எவரதும் வாக்குகள் எந்த கட்சிக்கும் என எழுதிவைக்கப்பட்ட வாக்குகள் அல்ல. எந்த கட்சியும் மக்களின் வாக்குகளை உரிமை கொண்டாட முடியாது. வாக்காளர்களாக பொதுமக்கள் தேர்தல் காலங்களில் தமக்கான தீர்மானங்களை எடுப்பார்கள். அதேபோன்று ராஜபக்ஷவினரின் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் பிளவுபட வேண்டாம், ராஜபக்ஷாக்களைத்  தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு முடியும் என்று கூறுவதெல்லாம்  வெறும் கற்பனை மட்டுமே.

இந்த நான்கு ஆண்டுகளில் ராஜபக்ஷக்களை பாதுகாத்தது யார்? ராஜபக்ஷ ஒரு பூச்சாண்டி என்றால் அந்த பூச்சாண்டியை பாதுகாத்தது ரணில் விக்ரமசிங்கவே. இந்த இரண்டு அணியினரும்  ஒரு அணியினரே. ஆகவே இந்த இரண்டு ஆட்சியாளர்களுக்கும் எதிராக  மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் எம்மை நம்பி வாக்களிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

கேள்வி: உங்களுடன் தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பும் பலமான தரப்பினர். ஒருபுறம் கோத்தபாய ராஜபக்ஷ மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியின் பலமான நபர் வருவார். உங்களால் போராட முடியுமா?

பதில்:- இவர்கள் பிரபலங்கள் என ஊடகங்களே உருவாக்கி வைத்துள்ளன.  ஊடகவியலாளர்கள் எழுதும் விமர்சனங்களை சந்திக்க முடியாது ஊடகவியலாளர்களின் கொல்லும்  மனநிலை வருகின்றது என்றால் அது  மிகவும் பலவீனமான நபர்களுக்கே வரும். மக்களின் சொத்துக்களை தன்வசப்படுத்தும் மனநிலை இருந்தால் அவர் திருடர்.  இலங்கையில் அரசியலை நல்ல இடத்துக்கு கொண்டுவர வேண்டும் என்றால் இந்த வேட்பாளர்கள் அனைவரையும் ஒரு இடத்திற்கு கொண்டுவந்து நாட்டினை கட்டியெழுப்பும்  கொள்கையை கேட்டால் யார் உண்மையான வீரர் என்பது தெரியும்.

கேள்வி : இந்த நாட்டின் அரசியல் தீர்வு குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்றது ஆனால் தீர்வு ஒன்று கிடைத்ததாக தெரியவில்லை. இந்த பிரச்சினையை ஜே.வி.பி. எவ்வாறு பார்க்கின்றது?

பதில் :- இலங்கை பல்லின மக்கள் கொண்ட பல மதம், இனங்கள் கொண்ட இராச்சியமாகும். யார் முதலில் வந்தது, யாருக்கு நாடு சொந்தம் என்பதெல்லாம்  இதிகாசம். அது இன்று அவசியமில்லாத ஒன்று. இந்த  நாட்டில் பிறந்து, வளர்ந்து இங்கேயே இறக்கும் மக்களே இன்று உள்ளனர்.

ஆகவே எம் அனைவருக்கும் நாடு சொந்தம். இந்த நாட்டில் அளவுக்கு அதிகமாக இரத்தம் சிந்தப்பட்டுவிட்டது. வடக்கிலும் தெற்கிலும் அளவுக்கு அதிகமாக இரத்தக்கறை படிந்துவிட்டது. இனியும் இது வேண்டாம். மக்கள் மத்தியில் எந்த பிளவும் இல்லாது சகல மக்களின் உரிமைகளை பாதுகாத்து அரசியலில் அனைவரையும்  பங்குதாரராக மாற்றி இன, மதமாக பிளவுபடாது முன்செல்வதே இனி அவசியமாகும். ஆகவே தேசிய ஒற்றுமையை உருவாக்குவதே எமது நாட்டின் எதிர்காலத்தை உறுதிபடுத்தும்.

அதற்கான அரசியல் அமைப்பு மாற்றம் அதனூடான சகல மாற்றங்களையும் உருவாக்க வேண்டும். இன்று தமிழர்களின் திரைப்படமாக, நாடகமாக, பாடலாக இருப்பது  இலங்கையின் படைப்புகளா? இல்லை இந்திய கலாசாரமே இங்கு தமிழர்கள் மத்தியில் ஊடுருவியுள்ளது.

இவ்வாறான எமது கலையை வளர்க்க முடியாத நிலைமைக்கு எமது ஆட்சியாளர்கள் கொண்டு சென்றுள்ளனர். எமது நாட்டுக்குள் எமது மக்களின் கலாசார தன்மைகளை உறுதிப்படுத்த  வேண்டும். அதுவே நல்லிணக்கத்தின் அத்திவாரமாகும்.

கேள்வி :- எனினும் ஆட்சியாளர்கள் தமது ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கம் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து அதிகம் பேசினாலும் தேர்தல் காலங்களில் தேர்தல் மேடைகளில் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளை இலக்கு வைத்தே தமது தேர்தல் பிரசாரங்களை செய்கின்றனர். நீங்களும் சிங்கள பெளத்த வாக்குகளை இலக்கு வைத்த அரசியலையா கையாள்வீர்கள்?

பதில்:- அவ்வாறான இனவாத அரசியல் செய்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. சிங்கள அரசியல் மத்தியில் பிரபல்யமான அரசியல் சிங்கள இனவாதம், தமிழ் அரசியல் வாதிகள் மத்தியில் பிரபல்யமான அரசியல் தமிழ் இனவாதம், முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் பிரபல்யமான அரசியல் முஸ்லிம் இனவாதம்.

ஆனால்  இதுதான் இந்த நாட்டின் மிகவும் மோசமான நாசகார அரசியலாகும்.  எமது நிகழ்ச்சி நிரலில் இனவாதம் என்றுமே இடம்பெறாது. தமிழ், சிங்கள, முஸ்லிம் இனவாதம் பேசவேண்டிய அவசியம் எமக்கில்லை.

வெளியில் இருந்து இனவாதம் பேசி மக்களை பிளவுபடுதுபவர்கள் தான் ஒன்றாக அமைச்சரவையில் இணைந்துள்ளனர். இவர்களால் மக்களே பிளவுபட்டுள்ளனர். எவ்வாறான கடினமான சூழலிலும் நாம் நல்லிணக்கத்தை பற்றியே சிந்திப்போம்.

கேள்வி : அரசியல் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று வழங்க  உங்களிடம் உள்ள வேலைத்திட்டம் என்ன?

பதில்:- இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவருக்குமான பொதுவான பிரச்சினைகள் உள்ளன. கல்வியை எடுத்துக்கொண்டால் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் பிள்ளைகள் அனைவருமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுகாதார பிரச்சினையை பார்த்தாலும் அடிமட்ட மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கை எடுத்துக்கொண்டால் முப்பது ஆண்டுகள் யுத்தத்திற்கு முகங்கொடுத்த தமிழ் மக்கள் மாறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. காணி பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, காணமால்போனோர் விவகாரம் என பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

இதனை எம்மால் மறுக்க முடியாது. யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் கணவனை இழந்த பெண்கள், தாய் தந்தையை இழந்த சிறுவர்கள், நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மாறுபட்ட பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆகவே அரசாங்கமாக இவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தோட்டத்தொழிலாளர்களை பார்த்தால் அவர்களுக்கு கொடுப்பனவு பிரச்சினையை விட சமூக பிரச்சினைகள் பல உள்ளன. கொழும்பில் வீடுகளுக்கு வேலைக்கு, கடைகளில் வேலைக்கு மலையகத்தில் இருந்து ஆண்கள் பெண்கள் கிடைக்க மாட்டார்களா என்றுதான் கேட்கின்றனர். அவர்களுக்கு சமூகத்தில் கீழ்மட்ட நிலைமை உள்ளதாக மாற்றப்பட்டுள்ளனர். முதலில் அவர்களுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்தை கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் சமத்துவமான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும்.

கொடுப்பனவு பிரச்சினைகளை நோக்கினால் அரசாங்கத்தில் உள்ள பலர் இன்றும் கம்பனிக்காரர்கள். அவர்களை கொண்டு சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடியாது. தொழிலாளர்கள் பக்கம் இல்லாது இவர்கள் அனைவரும் முதலாளிகள் பக்கம் இருந்தே தீர்வுகளை சிந்திக்கின்றனர். ஆனால் நாம் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என சிந்திக்கின்றோம். நாம் தொழிலாளர் பக்கமே நிற்கின்றோம். 150 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் இல்லாமல் வாழும் சமூகத்தை இனியும் புறக்கணிப்பதா, இதுவே எமதும் கேள்வி. தொழிலாளர் பக்கமே நாம் நிற்போம்.

கேள்வி :- சமீபத்திய அரசியல் முடிவுகளை பார்த்தால் வடக்கு –கிழக்கில் தமிழ் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் நிரந்தர வாக்குகள் என்ற ஒரு நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தகர்த்து தமிழ் மக்களின் ஆதரவை உங்களின் பக்கம் கொண்டுவர உங்களால் என்ன செய்ய முடியும்?

பதில்:- இனவாதத்தின் மூலமாகவே இந்த பிளவு உருவாக்கப்பட்டுள்ளது. எமக்கு தேவைப்படுவது வடக்கின் தலைமையோ, கிழக்கின் தலைமையோ, தெற்கின் தலைமையோ அல்ல. நாம் முயற்சிப்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தலைமைத்துவத்தை கொடுக்கவே நினைக்கின்றோம்.

இதற்காக சகல தரப்புடனும் மக்களின் தலைமைகளுடன் ஆரோக்கியமான கலந்துரையாடலை கையாளும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். மாகாண அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தாது, இனங்கள் என்ற ரீதியில் பிளவுகளை ஏற்படுத்தாது சகல மக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் தேர்தல் நகர்வு ஒன்றினையே நாம் முன்னெடுக்க முயற்சிக்கின்றோம்.

பிளவுபட்ட  அரசியலே இன்றும் இந்த நாட்டில் நிலவுகின்றது. ஆகவே இதில் இருந்து விடுபட்ட அரசியலையே நாம் கையாள நினைக்கின்றோம்.

கேள்வி :- சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டை எடுத்துக்கூறக்கூடிய வேறு எந்த கட்சிகளுக்கும் இல்லாத சிறப்பம்சம் உங்கள் கட்சிக்கு உள்ளது. இதனை நீங்கள் சரியாக கையாண்டால் தமிழ் மக்கள் மத்தியில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும் என்பதை அறிந்து கையாள முடியுமே?

பதில்:- ஆம், தமிழ் மக்கள் மத்தியில் எமது அரசியலை பலப்படுத்த வேண்டும். அதேபோல் தமிழ் மக்களின் எண்ணம், கொள்கை, சிந்தனை என்ன என்பதை தெற்கு மக்கள் மத்தியில் சரியாக கொண்டு செல்லவும் வேண்டும். இது இரண்டையும் செய்யாது முன்நகர முடியாது.

அதனை  நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான நடவடிக்கைகளை நாம் சரியாக கையாள வேண்டும். இதற்கான கடுமையான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் வடக்கில் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள இன்றுவரை எம்மால் முடியாது உள்ளது. இறுதிவரை முடியாதென்று  இதற்கு அர்த்தம் அல்ல. எமது முயற்சிகளை நாம் கைவிடப்போவதும் இல்லை. வடக்கு கிழக்குக்கு இடையில் ஒரு பாலமாக இருப்போம்.

கேள்வி : தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள அவர்களை உங்களின் அரசியல் பயணத்தில்  இணைத்துக்கொள்ள நீங்கள் கையாளும் முறைமை என்ன?

பதில்:- வடக்கு – கிழக்கு மக்களை பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களின் பிரதேசங்களில் ஒரு கட்சியை தெரிவு செய்யவேண்டும் என்றால் நிறைய கட்சிகள் இருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கு மக்களினால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தெரிவுசெய்ய வேண்டும் என்றால் அவர்கள் தெரிவுசெய்ய வேண்டிய கட்சி மக்கள் விடுதலை முன்னணியே. வடக்கு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியையோ அல்லது மஹிந்த ராஜபக் ஷவின் கட்சியை ஏன் தெரிவு செய்கின்றனர்? அவர்கள் ஆட்சி செய்த காலங்களில் தமிழ் மக்களுக்கு என்ன செய்துள்ளனர்.

அவர்கள் வடக்கு மக்களுக்கு மட்டும் அல்ல தெற்கு மக்களுக்கும் எதனையும் செய்யவில்லை என்பதை அளவுக்கு அதிகமாகவே நிரூபித்துள்ளனர். ஆகவே விசேடமாக தமிழ் மக்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் வடக்கின் தமிழ் கட்சிகளை நீங்கள் வேறு தேர்தல்களில் ஆதரிக்கலாம் ஆனால் இந்த தேர்தலில் தெற்கின் அரசியல் கட்சி மீதும் நம்பிக்கை வைத்து உங்களின் தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் மக்கள் விடுதலை முன்னணியை நாடுங்கள்.

தெற்கின் கட்சியொன்றை தமிழ் மக்கள் நம்புவதென்றால் மக்கள் விடுதலை முன்னணியே ஒரே தெரிவு.

கேள்வி :  நிறைவேற்று ஜனாதிபதியின்  அதிகாரங்களை நீக்கும் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்த  நீங்கள் இன்று ஜனாதிபதி தேர்தல் களத்தில் ஒரு வேட்பாளராக உள்ளீர்கள், 20ஆம் திருத்தம் இப்போது வேண்டாம் என்றா நினைகிறீர்களா?

பதில்:- அவ்வாறு இல்லை, மனித சமூகம் உருவாக்கப்பட்ட காலத்தில் தனிநபர் அதிகாரமே இருந்தது. மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தனி நபரே தீர்மானித்தார். பின்னர் சமூக போராட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் இந்த ஏகாதிபத்திய அடக்குமுறை தகர்த்தெறியப்பட்டன. மக்களை நிருவகிக்க பாராளுமன்றம் உருவாகியது, சட்டம் ஒழுங்குகளை உருவாக்க நிறைவேற்று அதிகாரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இவை அனைத்துமே மக்கள் போராட்டங்களின் விளைவுகளாகும்.

ஆனால் மீண்டும் அராஜக யுகத்தை போன்றே தனி நபரின் கைகளின் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. இந்த நிறைவேற்று  அதிகாரம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை அடக்குமுறைக்காரர்கள் முதல்கொண்டு ஜோக்கர் வரையில் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளனர். ஆகவே இந்த கட்டமைப்பை தகர்த்தெறிய வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் நாம் இப்போதும் உறுதியாக உள்ளோம்.

கேள்வி : ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 20ஆம் திருத்தத்தை நிறைவேற்ற முடிந்தால் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் முன்வருவீர்களா?

பதில்:- இந்த பாராளுமன்றத்தில் இன்றுள்ள ஆட்சியாளர்களின் மனோநிலையில் இதனை நிறைவேற்ற முடியாது. ஆனால் பாராளுமன்றம் முழுமையாக இணக்கம் தெரிவித்து நிறைவேற்று அதிகாரத்தை நீக்க தீர்மானம் எடுத்தால் நாம் முன்வருவோம்.

இதுவரை காலமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக கூறியவர்கள் அதனை செய்ததில்லை. மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்தவர்கள் அதனை செய்யவில்லை.

ஆனால் நாம் 20ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளோம் எம்மால் நிச்சயமாக நிறைவேற்று அதிகாரத்தை நீக்க முடியும்.

நேர்காணல்: ஆர்.யசி