ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுவிற்கு பின்பே நாம் நிலையான முடிவு எடுப்போம்-பிரபா

292 0

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மாகாண சபை தேர்தலை நடாத்த ஜனாதிபதி தரப்பு முயல்கின்றது. இருப்பினும் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக வேட்பு மனு தாக்கலின் பின்பே எமது உறுதியான முடிவினை நாம் மேற்கொள்வோம் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது, நாம் ஐக்கிய தேசிய கட்சியின் அணியில் இல்லை. முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்தவுடனான நல் உறவையே பேணி வருகின்றோம். ஆகவே, அவரது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக உள்வாங்கப்படுவாரா என்கின்ற சிக்கல் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளரும் அறிவிக்கப்படடுள்ளார். அதே நேரம் உட்கட்சி பூசல் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களின் தராதரத்தை கருத்திற் கொண்டும் எமது தமிழ் மக்கள் சார்பாக குறிப்பாக வன்னி மாவட்ட மக்கள் சார்பான நேர்மையான நிலைப்பாட்டை மேற்கொள்பவருக்கே எமது ஆதரவை வழங்க முடியும்.

வெறுமனே வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கி விட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் அரசியலை செய்ய நான் விரும்பவில்லை. வன்னி மாவட்டத்தில் இருக்கும் மக்கள் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் என்னிடம் கைகோர்த்திருக்கும் இளைஞர்கள் ஆகியோரின் எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கின்றது. இதனை நன்கு உணர்ந்து அவசரமின்றி நான் எனது முடிவுகளை மேற்கொள்வேன்.

ஜனாதிபதி வேட்புமனு தாக்கலுக்கு முன்பு பல அதிரடி அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றது. இவ்வாறான நிலையில் நாம் எமது முடிவுகளை அவதானமாக எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். கடந்த கால வரலாற்றை விட எதிர்காலத்தில் எமது மக்களுக்கான தேவையினை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் நாம் தெரிவு செய்யும் வேட்பாளருக்கு பல்லாயிரக்கணக்கான வாக்குகளை வன்னி மாவட்டத்தில் பெற்றுக் கொடுக்கக் கூடிய சூழலை எனது கட்சியின் ஊடாக நான் ஏற்படுத்தியிருக்கின்றேன். ஆகவே இவ்வாக்குகளை எமது மக்களின் நலனுக்கு அப்பால் சென்று வீணடித்துவிட நான் விருமபவில்லை. அதே நேரம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை தமிழ் மக்களுக்கு சார்பான இடதுசாரி சட்சிகளுடனும் மேற்கொண்டு வருகின்றேன். இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் மக்கள் சார்பான பாரிய மாற்றத்தினை காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவே, இவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு எமது கட்சியின் தலைமைக்குழு மட்டுமின்றி அமைப்பாளர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரிடமும் கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை எடுப்போம். நாங்கள் ஒருமுறை முடிவினை எடுத்து விட்டால் அம்முடிவில் எவ்வித மாற்றத்தையும் எடுக்க மாட்டோம் என்ற அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.