பாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள்!

266 0

பாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதனால்  பாராளுமன்ற உறுப்பினராக  என்னால் இந்த நாட்டில் சுதந்திரமாக  கருத்துக்களை கூற முடியாத,சுதந்திரமாக வாழ முடியாத நிலையில் உள்ளேன். எனவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எஸ். ஸ்ரீதரன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்த போதே அவர் இக்கோரிக்கையை விடுத்தார். அவர் மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இலக்கம் 882, ஆறுமுகம் வீதி,வட்டக்கச்சியில் உள்ள எனது சொந்தக்காணியிலுள்ள சொந்த வீட்டில் இன்று அதிகாலையில் இராணுவத்தினர்  மற்றும் பொலிஸார் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் குவிந்து எனது காணி மற்றும் வீட்டை சுற்றிவளைத்து எனது வீட்டுக்காணியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஆயுதங்களை மீட்க வந்துள்ளதாகவும் எனவே  எனது காணியின் கதவுகளை திறக்குமாறு கூறியுள்ளனர்.

எனது காணியை பராமரிக்கின்ற சண்முகநாதன் என்பவரை கிராம அலுவலரின் உதவியோடு அவரின் வீட்டுக்கு சென்று  அழைத்து வந்து எனது வீட்டின் கதவுகளையும் திறக்குமாறு கூறியுள்ளனர். இந்த சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கை தொடர்பில் எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

நான் ஏற்கனவே பல்வேறு கட்டங்களில்  இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளேன். இப்போது கூட இந்த சோதனை நடவடிக்கையானது என்னுடைய பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுகின்ற செயலாகவே உள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.