சுதந்திர கட்சியுடனான கூட்டணிக்கு அடுத்தவாரம் இறுதி தீர்வு – டலஸ்

247 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அமைக்கவுள்ள பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் தற்போது அரசியல் களத்தில் எழுந்துள்ள  பல கேள்விகளுக்கு அடுத்த வாரம் ஒரு தீர்வு கிடைக்கும் என  பாராளுமன்ற உறுப்பினர்  டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும், பரந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தேர்தலை மையப்படுத்தி இதுவரையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை.

கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு தொடர்பிலே இதுவரையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆகவே தற்போது எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாக காணப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கூட்டணியமைத்தல் தொடர்பில் ஒவ்வொரு மாதமும்  இரு தரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடந்த இரண்டு மாதமாக  கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதற்கு   அரசியல் உட்பட  பல்வேறு  பொது  காரணிகளும் செல்வாக்கு  செலுத்தின.

எதிரணியின்  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில்   நிலவிய சர்ச்சைக்கு  தற்போது தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.   தற்போது கூட்டணி குறித்த பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்களும் அரசியல்  களத்தில்  பேசப்படுகின்றன.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பது தேவையற்றது என்ற நிலைப்பாட்டிலும் ஒரு  தரப்பினர் உள்ளமையினையும் அறிய முடிகின்றது.

கூட்டணி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு எதிர்வரும் வாரத்தில் நிச்சயம் தீர்வு  முன்வைக்கப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு   இரண்டு தரப்பிற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத  வகையில் அமைவதுடன் இரு தரப்பின் அரசியல் செயற்பாடுகளையும் பலப்படுத்தும் என்பதை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.