மட்டக்குளி – கதிரானவத்த பிரதேசத்தில் குடியிருப்பொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரொருவர் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று சனிக்கிழமை மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளாதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது :
மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரானவத்தை பிரதேசத்தில் பிரதேசவாசிகளால் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகநபரொருவர் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மட்டக்குளி பொலிஸார் குறித்த பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.
அதன் போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய கதிரானவத்த மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜானக கோமஸ் என்பவராவார். இவர் கதிரானவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள மாடிக் குடியிருப்பு ஒன்றுக்குள் அத்து மீறி நுழைய முற்பட்டுள்ளார்.
அந்த குடியிருப்பின் 3 ஆவது மாடியில் இவரைக் கண்ட பெண் ஒருவர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் மாடியிலிருந்து குதித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் நேற்று சனிக்கிழமை காலை 8 தொடக்கம் 9 மணிக்கிடைக்கப்பட்ட நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

