ஆக்டோபசை தனது முகத்தின் மீது படரவிட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த பெண்ணின் முகத்தை ஆக்டோபஸ் கடித்து குதறியது.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்த ஜேமீ பிஸ்செக்லியா என்ற பெண், கடந்த வாரம் அங்கு நடந்த மீன்பிடிக்கும் போட்டியில் கலந்துகொண்டார். டக்கோமோ நேரோஸ் பாலத்தின் அருகே படகில் இருந்தபடி மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த ஆண் போட்டியாளரின் வலையில் ஆக்டோபஸ் ஒன்று சிக்கியதை அவர் பார்த்தார்.
உடனே அவருக்கு ஆக்டோபசுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என ஆசை வந்தது. அதன்படி ஆக்டோபசை வாங்கி தனது முகத்தின் மீது படரவிட்டு, இரு கைகளையும் விரித்தபடி புன்சிரிப்புடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். முதலில் ஆக்டோபஸ் அவருடன் விளையாடுவது போல் அவர் உணர்ந்தார். எனவே ஆக்டோபசை முகத்தில் இருந்து எடுக்காமல் அப்படியே வைத்திருந்தார். அப்போது ஆக்டோபஸ் திடீரென அவரது கன்னம் மற்றும் கழுத்து பகுதியில் கடித்து குதறியது.
இதில் அவரது முகத்தில் இருந்து ரத்தம் சொட்டியது. தாங்க முடியாத வலிக்கு மத்தியில் அவர் கடுமையாக போராடி முகத்தில் இருந்து ஆக்டோபசை எடுத்தார். ஆக்டோபஸ் கடித்ததில் ஜேமீ பிஸ்செக்லியாவின் இடது பக்க முகம், தொண்டை பகுதி பலமாக வீங்கின. இதற்காக சிகிச்சை பெற்று வரும் அவர் தன்னை போன்று யாரும் ஆக்டோபசுடன் விபரீத விளையாட்டை மேற்கொள்ளாதீர்கள் என அறிவுரை வழங்கி இருக்கிறார்.
எனினும் தன்னை காயப்படுத்திய ஆக்டோபசை பழிவாங்கும் விதமாக அதை தான் சமைத்து சாப்பிட்டு விட்டதாக அவர் கூறினார்.