இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பு முரண் என தெரிவிக்கப்பபட்டு அரசாங்கம் அதனை வாபஸ் பெற்றுக்கொண்டது.
அதனால் பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒருமணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக ஒழுங்குப்பத்திரத்தில் தெரிவித்திருந்ததற்கமைய சபாநாயகரினால் இலங்கை மின்சாரம்(திருத்தச்) சட்டமூம் தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்க அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரண் என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்ட அறிவிப்பு இன்று தான் கிடைக்கப்பெற்றது. அதனால் அரசியலமைப்புக்கு முரணாக இருக்கும் சட்ட மூலத்தின் சரத்துக்களை திருத்திக்கொண்டு முன்வைப்போம். அதனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்ட மூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்கின்றோம் என்றார்.
அரசாங்கம் குறித்த சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதால் சபாநாயகர் பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்றத்தை இன்று பிற்பகல் ஒரு மணிவரை ஒத்திவைத்தார்.

