போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்!

661 0

“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.”

“கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.”

“இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.”

“உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி வெயில் வழிய கதைச்சா வித்தியாசமான முறையில கதைப்பனாம்.”

“வெயில்ல நிற்க ஏலாது. கண் இருட்டிக்கொண்டுவரும். தலை சுத்தும், விறைக்கும்.”

“அந்த இடத்தில குத்த வெளிக்கிட்டா கை அப்படியே இறுகிப் போயிரும்.”

இவர்கள் அனைவரும் மரத்திலிருந்து விழவில்லை. இவர்களுக்கு விபத்து நேரவில்லை. உடல் உபாதைகளுடன் பிறக்கவுமில்லை. 30 வருடங்களாக நீடித்த கொடூர போரினுள் சிக்குண்டு தினம் தினம் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள். காயப்பட்ட நேரமே செத்திருந்தால் இந்த நரக வேதனையை ஒவ்வொரு நாளும் அனுபவிக்க நேர்ந்திருக்காதே என்று ஒவ்வொரு நாளும் அவஸ்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள்.

6 வயதாக இருக்கும்போது தலையில் காயமடைந்த அகழ்விழி உட்பட போரின்போது நேரடி தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி, ஷெல் தாக்குதலில் அந்த இடத்திலே மகளை இழந்து இரும்புத்துண்டுகளை சுமந்து வாழும் தாய் என 10 பேரை சந்திக்க முல்லைத்தீவு சென்றிருந்தேன். வயிற்றுப் பசிப் போராட்டத்துக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் தாங்கள் அனுபவித்து வரும் வேதனையை என்னோடு பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய குரல்களுக்கு செவிசாயுங்கள்.

இப்ப இவா ஸ்கூலுக்குப் போறதில்ல. தலையில காயம் பட்டதால அடிக்கடி வலிப்பு வரும். இந்த வருசம் ஓ.எல் பரீட்சை, என்னதான் செய்ய..?

2009 மார்ச் மாதம் புதுமாத்தளன்ல இருக்கும்போதுதான் இவா காயம்பட்டா. அப்போ 6 வயசிருக்கும். நாங்க தங்கியியிருந்த இடத்தில ஷெல் அடிக்கிற சத்தம், ரவுன்ட்ஸ் சத்தம் எதுவுமே எங்களுக்கு கேக்கல. நல்ல பகல் நேரம் அது. நாங்க தரப்பாள் கொட்டிலுக்கத்தான் இருந்தம். தூரத்திலென்டா சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. திடீரென்று மகள் சரிஞ்சி விழுந்திட்டா. என்ன நடந்தது, என்ன நடக்கிறதென்று ஒன்டுமே எனக்கு தெரியேல்ல. பேந்துதான் தலையில் காயம்பட்டத தெரிஞ்சு கொண்டன். இவாட பிடறியில பட்ட ‘பீஸ்’ உள்ள போய் காதுப்பக்கமா வீங்கி இருந்தது. உடனடியா அப்போ அங்க இருந்த தற்காலிக ஹொஸ்பிட்டலுக்குத் தூக்கிக்கொண்டுபோனன். ஒபரேசன் செய்யவேணும், ஆனா மருந்து இல்லையெண்டு டொக்டர் சொன்னார்.

என்ன செய்தன் ஏது செய்தன் என்ற நினைவே இப்ப இல்ல. எப்படியாவது இராணுவத்தின்ர கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து முகாமில இருந்த ஹொஸ்பிடல்ல வச்சி வைத்தியம் பார்த்தன். அவங்க உடனே வவுனியாவுக்குக் கொண்டு போனவங்கள். பெரிய டொக்டர் வந்து பார்த்திட்டு இப்பவே கண்டிக்குக் கொண்டுப் போகச் சொன்னார். இரண்டு மாதங்களா அங்க வச்சிதான் மகளுக்கு வைத்தியம் பார்த்தம். நாலு நாள் கழிச்சிதான் கண் முழிச்சா, 20 நாளைக்குப் பிறகுதான் பேச ஆரம்பிச்சா.

ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று ஊசி அடிப்பினம். சேலைனும் ஏத்துவினம். கடைசியா நரம்பு பாதிக்கப்படும், ஒபரேசன் செய்ய முடியாதென்று டொக்டர் சொன்னார்.

வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் நல்லாத்தான் இருந்தவ. பேந்துதான் இந்த வலிப்பு வரத் தொடங்கிற்று. இப்போ ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது. இப்போ ஒவ்வொரு மாதமும் மல்லாகம் ஹொஸ்பிட்டலுக்கு கிளினிக் போறம். வலிப்பு வாறதுக்கு மட்டும் குலுசை தருவினம்.

இப்ப சொல்றாங்கள் வெளிநாடு வழியா ஒபரேசன் செய்யலாம் என்று. எங்கேயும் வெளிக்கிடேல்ல. 8, 9 இலட்சம் செலவாகுமாம். நான் தோட்ட வேலைதான் செய்றன். மூத்த மகன் மட்டும்தான் வேலைக்குப் போறார். மற்ற மூன்று பிள்ளைகளும் படிக்கினம். இத்தனை இலட்சத்துக்கு நான் எங்க போக?

கொஞ்சக் காலமா இந்த வலி இருக்கேல்ல. ஆனால், இரண்டு நாளைக்கு முன்னால கடலுக்குப் போயிருந்தன். தனியா வலைய பிடிச்சி இழுக்க முடியாதளவுக்கு கை விறைச்சிட்டு. ஒரு மாதிரி சமாளிச்சி வந்து சேர்ந்திட்டன்.

1994ஆம் ஆண்டு நான் காயப்பட்டபோது இரண்டு கைலயும் ‘பீஸ்’ இறங்கீற்று. அப்போது ட்ரீட்மென்ட் செய்தனான். ஆனால், ‘பீஸ்ஸ’ வெளியால எடுக்கேல்ல. வலது கை இரண்டு விரலும் இழுத்திருந்தது. பந்து வச்சி எக்ஸசைஸ் செய்து சரிவந்திட்டுது. ஆனால் இன்னும் ‘போல்ஸ்’ ஓடித்திரியுது. அத எடுக்க ஏலாது.

இடது கை தோல் மூட்டுக்குள்ள இருக்கிற ‘பீஸால’தான் கடும் வேதனையா கிடக்கு. ஹொஸ்பிட்டல்ல கொண்டு காட்டினன். எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்திட்டு அதை எடுக்க ஏலாதெண்டு சொல்லிப்போட்டாங்கள். எடுத்தால் கை விளங்காதாம். ஒரு சில நேரங்கள்ல அந்த இடத்தில குத்த வெளிக்கிட்டா கை அப்படியே இறுகிப் போயிரும். கைய அசைக்கக்கூட முடியாது. வைப்தான் எண்ணையெல்லாம் தடவி வழமை நிலைக்கு கொண்டுவருவா. எந்த நேரமும் இப்படி ஆகாது. அப்படி ஏதும் நடந்தால் யாராவது உதவிக்கு இருக்க வேணும்.

ஒரு நாள் அப்படித்தான், தனியா கடலுக்குப் போய் நடுக்கடல்ல வச்சி கை இறுகிட்டு. ஒண்டும் செய்ய முடியேல்ல. வலையயும் இழுக்க முடியேல்ல, படகையும் திருப்ப முடியேல்ல. அப்படியே 3,4 மணித்தியாலமா தனியா கிடந்தன். அந்த வழியா வந்த ஊர்க்காரங்களின்ர கண்ணில பட்டதால தப்பிச்சன்.

அதேபோல இன்னொரு நாள் தென்னை மரத்துக்கு ஏறி உச்சியில இருந்தநேரம் இதே மாதிரி இடது கை இழுத்துப் பிடிச்சிருச்சிற்றுது. என்னால் ஒண்டும் செய்ய முடியேல்ல. மரம் வழியா இறங்கவும் ஏலாது, அந்த உச்சியிலிருந்து குதிக்கவும் ஏலாது. பக்கத்து வீட்டில இருந்த அண்ணர் மரத்துக்கு ஏறி என்னை கயிறு கட்டி மரத்தில இருந்து இறக்கினார்.

இப்படி நிறைய நடந்திருக்கு. இதுபோல ஏதாவது நடக்குமெண்டு வேலைக்குப் போகாம இருந்தா மூன்று பிள்ளைகளின்ர படிப்புக்கு என்ன செய்றது? இரண்டு மாசத்தில மண்ணெண்னைக்கு மட்டும் 50 ஆயிரம் கடன் இருக்கு. தொடர்ச்சியா மீன் பட்டால்தான் அந்தக் கடன கூட அடைக்கலாம்.

இந்த இரும்புத் துண்டு உடம்புல இருக்கிறதால எனக்கு என்ன நடக்கும் என்று ஒரு நாள் கூட நான் நினைச்சிப் பார்த்ததில்ல. இருக்கிற வரைக்கும் பிள்ளைகளோடு சந்தோசமா இருந்திட்டுப் போவம்.

நான் இயக்கத்தில போராளியா இருந்தன். வீட்ல பெண் சகோதரங்கள் மூன்று பேர் இருந்ததால நான் போய் சேர்ந்தன்.

1997ஆம் ஆண்டு நடந்த சண்டையில காயப்பட்டன். என்ர பிடறியில ‘பீஸ்’ ஒன்று இருக்கு. நெஞ்சிலயும், கையிலயும் ‘போல்ஸ்சும்’ இருக்கு.

அப்பவே எடுக்க ஏலாதெண்டு விட்டுட்டினம், மூளைக்குப் பிரச்சினையாகுமென்று. இப்பவும் எடுக்க எந்த உத்தேசமும் இல்ல. அப்படி ஏதாவது முயற்சிசெய்து பிரச்சினையாகிட்டால் பிள்ளைகள் 4 பேரையும் பற்றி நினைக்கும்போதே பயமா இருக்கு. இருக்கும் மட்டும் இருக்கட்டும்.

முதல்ல பெரிசா வலி இருக்கல்ல. ஆனால், வெயில் வழியா நின்றால் தலை சுத்தும். ஒருக்கா வேலைசெய்யும்போது தலையில அடிப்பட்டு கூடுதலா வருத்தத்த தந்தது.

தடுப்புக்குப் போய் வந்தபிறகு இன்னும் மோசம். பாரங்கள் தூக்கி, ஓடித்திரியிற வேலையெல்லாம் இப்ப செய்யமுடியாது, களைக்கும். முன்ன செஞ்சமாதிரி செய்ய ஏலாது.

இயக்கத்தில இருந்ததால தடுப்பு முகாமில இருந்தநேரம் சிஐடிக்காரரிட்ட போய் விசயத்த சொன்னன். விசாரிச்சிட்டு விட்டுட்டினம். மாதாமாதம் வந்து சைன் மட்டும் வைக்கச் சொன்னவங்கள். திடீரென்று ஒரு நாள் டிஐடி என்று சொல்லிக் கொண்டு வந்தவங்க, விசாரிக்க. ஒரு நாளில வந்திடலாம் என்று கூட்டிக்கொண்டு போனாங்கள். 4 வருஷத்துக்கு பிறகுதான் வெளியில் விட்டவங்கள்.

அந்த 4 வருஷமும் சரியான சித்திரவதை. ஒரு வெள்ளை சேர்ட் முழுக்க இரத்தம். அந்த சேர்ட்டையும் நான் வீட்டுக்கு கொண்டுவந்தனான். நெஞ்சுப் பகுதியில கறுப்பா வட்டம் வட்டமா இருந்தது. விசாரிக்கும் போது பேனையால குத்துவான். கால் பெருவிரல் இரண்டிலயும் நகம் இல்ல. சீமேந்து தரையில சப்பாத்துக் காலோட என்ர கால் மேல ஏறுவான். இப்போ எனக்கு நடக்கிறது இதுன்ர பாதிப்போ தெரியல.

உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி வெயில் வழிய கதைச்சா வித்தியாசமான முறையில கதைப்பனாம். எனக்குத் தெரியாது. கன பேர் சொல்லியிருக்கினம். அதனால பின்னேரம் 6 மணிக்கு குளத்துக்குப் போய் விடியக்காலை வெல்லனா 5 மணிக்கு வந்திருவன்.

மழைக்கு நல்லா நனைஞ்சா ஒரு கிழமை ரெண்டு கிழமை வீட்ட படுத்திருக்க வேண்டியதுதான். தலை வெயிற்றா இருக்கும். வெளியில போறதில்ல. கனகன பிரச்சினைகள கொண்டுவந்துவிட்டிடும். அதனால எங்கயும் போறதில்ல. குளத்துக்குப் போய் வீட்டுக்கு வாறது மட்டும்தான்.

ரெண்டு மாடுகள் இருக்கு, அதில பால கறந்து விற்று வாழ்க்கைய கொண்டு நடத்திறம். எந்த நாளும் மீன் பிடிபடுறதில்ல. ஒருசில நாட்கள் 200 ரூபாவும் கிடைக்கும் 2,000 ரூபாவும் கிடைக்கும். 100 ரூபாவும் வீட்டுக்கு எடுத்து வந்திருக்கன்.

முன்னாள் போராளி என்று எந்த உதவித் திட்டமும் கிடைக்கேல்ல. எல்லாமே இவாதான் (மனைவி). நான் கொண்டுவந்து குடுக்கிற காச வச்சிக்கொண்டு சமாளிச்சுக்கொண்டு போறா.

முள்ளிவாய்க்கால்ல வச்சிதான் நான் காயப்பட்டன். 2009 இடம்பெயர்ந்து கொண்டிருக்கேக்க. ஷெல் ‘பீஸ்’ ஒன்று முள்ளந்தண்டு பக்கமா ஏறிற்று. காயப்பட்டு மருத்துவம் செய்யமுடியாம ஒரு கிழமையா இடம்பெயர்ந்து கொண்டிருந்தம். கடைசியா உயிர கையில பிடிச்சிக் கொண்டு இராணுவத்திட்ட போய்ச் சேர்ந்தம். அங்கபோய் விசாரிச்சிவிட்டு மருந்து கட்டப்போனன். என்ர காயத்த பார்த்திட்டு, உடன் காயமென்டா ‘பீஸ்’ எடிப்பினமாம், என்ர காயத்தில ஊனம் வடிய வெளிக்கிட்டதால எடுக்கேல்ல. குறிப்பிட்ட காலத்தில ‘பீஸ்’ வெளியில வரும், அப்ப எடுங்கோ என்று மருந்து மட்டும் போட்டவங்கள்.

மூன்று மாதமாக நடக்கமுடியாம இருந்தனான். என்னை தாங்கிக்கொண்டுதான் திரிஞ்சவ. காயங்கள் மாறினவுடன் நோர்மலா நடக்கத் தொடங்கினன். மீள்குடியேறி தோட்ட வேலை, வீடு கட்ட மணல் ஏத்தினது எல்லாம் நான்தான். அப்ப ஒரு வலியும் இருக்கேல்ல. ஆனால், கால் கொஞ்சம் விறைப்பாதான் இருந்தது.

வீட்டுவேலையெல்லாம் முடிச்சி ஒரு கிழமையால வலிக்க ஆரம்பிச்சது. கடுமையான வேதனையோடுதான் இருந்தனான். அத வார்த்தையால சொல்ல முடியாது. கடைசியில பொறுத்துக்கொள்ள முடியாமல் 2015ஆம் ஆண்டு கிளிநொச்சி ஹொஸ்பிட்டலுக்குப் போனனான்.

அங்க ஒரு டொக்டர் என்னைப் பார்த்தவர். முள்ளந்தண்டில இரண்டு தரம் ஊசி போட்டார். வலி குறைஞ்சி சுகமாகும் என்று சொன்னவர். ஆனால், வலி கூடினதே தவிர குறையேல்ல. பேந்து ஒபரேசன் செய்வோம், ஒபரேசன் செய்வோம் எண்டு சொல்லிக்கொண்டிருந்தவர், திடீரென்று இன்னொரு ஹொஸ்பிட்டலுக்கு மாறிவிட்டார். அந்த இடத்துக்கு புதுசா வந்த டொக்டர் குடும்பத்தாக்கள கூட்டிவரச் சொன்னார். “ஒபரேசன் செய்தால் சில நேரம் பரலைஸாகலாம்” எண்டு சொல்ல இவா பயந்திட்டா. எனக்கு ஏதும் ஆகிவிடும் எண்டு ஒபரேசன் செய்யவேணாம் என்று சொல்லீற்றா.

மூன்று வருஷமா வீட்டுக்குள்ளதான், ஒன்று இவா வரவேணும். இல்லையென்றால் தங்கச்சி வரவேணும். தனியா ஒண்டுமே செய்யமுடியாது. இப்படியே எவ்வளவு நாள்தான் இருக்க. எனக்கும் எழும்பி நடக்கவேணும் என்று ஆசை இருந்தது. நடப்பது நடக்கட்டும் என்று யாழ்ப்பாண ஹொஸ்பிட்டலுக்குப் போனன். தொடர்ந்து கிளினிக்கும் வரச் சொன்னவங்க.

இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போயினம். இவா மட்டும்தான் வேலைக்குப் போறா. தோட்ட வேலை, மாடு குளிப்பாட்ட, பட்டி துப்பரவாக்க, சாணம் அல்ல எண்டு எல்லா வேலைக்கும் போவா. பாவம்…! என்னாலதான் ஒரு உதவியும் செய்ய முடியேல்ல. அப்படி கொண்டுவந்து தரும் காச வச்சித்தான் யாழ்ப்பாணத்துக்குப் போய் வருவன்.

2019.01.27ஆம் திகதி இரத்தம், யூரின் செக் பண்ணவேணும் எண்டு வரச் சொன்னவங்கள், செக் பண்ணிற்று இண்டைக்கே ஒபரேசன் செய்யலாம், தயாரா இருங்கோ என்று டொக்டர் சொன்னவர். உடனே தங்கச்சிக்கு கோல் எடுத்து விசயத்தை சொன்னன். 4 டொக்டர், ஐந்தரை மணித்தியாலம் ஒபரேசன். 6, 7 மணித்தியாலத்துக்குப் பிறகுதான் கண் முழிச்சன். நான்கு நாட்கள்தான் ஹொஸ்பிடல்ல இருந்தனான்

முள்ளந்தண்டு பகுதியிலிருந்து நீக்கப்பட்ட உலோகத்துண்டு
இன்னும் நல்லா குணமாகேல்ல. குனிய வேண்டாம் என்று சொல்லியிருக்கினம். அதுக்கு ஏற்றால்போல டொய்லட் வசதியில்ல. ஒரு நாற்காலியத்தான் பாவிக்கிறன். எனக்கு எந்த உதவியும் வேண்டாம். இத கூட எப்படியாவது சமாளிச்சிடுவன்.

2009 ஆம் ஆண்டு, தம்பியாக்கள் 2 பேரயும் அத்தானையும் கையில கொண்டுபோய் இராணுவத்திடம் ஒப்படைச்சம். அவங்கள எப்படியாவது தேடித்தந்தீங்க எண்டா உங்களுக்கு புண்ணியமா இருக்கும்.
2009 சித்திரை, பச்சைபுல்மோட்டை எண்டு நினைக்கிறன். நாங்கள் குடும்பமா இடம்பெயர்ந்து கொண்டிருந்தம். எல்லா பக்கமிருந்தும் ஷெல் வந்து விழுது. எந்தப் பக்கம் இருந்து ரவுன்ஸ் வருதென்றே தெரியாது. எங்களுக்கு நெருக்கமா பெரியதொரு சத்தம், அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அந்தநேரம்தான் நான் காயப்பட்டனான். பெரிய காயம் இல்லையென்டாலும் நெஞ்சுலயும் தொடையிலயும் ‘பீஸ்’ இறங்கிட்டு.

அன்றையிலயிருந்து இன்றைக்கு வரைக்கும் ரெண்டு தரம்தான் மருந்து எடுக்கப்போனன். ‘பீஸ்’ ஒரு இடத்தில நிலையா நிண்டவுடன் வரச் சொன்னவங்க ஒபரேசன் செய்யலாம் எண்டு. ஒரு சிலநேரம் நெஞ்சில உள்ள ‘பீஸ்’ ஒரே இடத்தில் நிற்கும். அப்போ போகலாம் எண்டு நினைச்சாலும் மனம் இடம் குடுக்காது. ஒருவேளை ஒபரேசன் செய்து எனக்கு ஏதும் நடந்திட்டது என்றா குடும்பத்த யார் பார்க்கிறது? அதனால இருக்கிற வரைக்கும் உழைப்பம் என்டு வலியை பொறுத்துக் கொள்வன்.

நான் கூலி வேலைக்குத்தான் போறனான். தோட்ட வேலைகள், வீடுகள் கட்ட, கோயில் வேலைகள். டிரக்டரும் ஓடுவன். இருந்தாலும், கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும். காலும் உலையும். வெயிலிலயும் கனநேரம் இருக்கமுடியாது.

2010ஆம் ஆண்டு கிணறு வெட்ட போன இடத்தில ஏற்பட்ட விபத்தில அப்பா இறந்திட்டார், ஒரு தம்பியும் நாலு தங்கச்சியும் அம்மாவும்தான் இருக்கிறம். கடைசி தங்கச்சியும் தம்பியும் கதைக்க மாட்டினம். நான் மட்டும் தான் வேலை செய்றன். ஒரு நாளை வேலைக்கு போகாம மருந்து எடுக்க வெளிக்கிட்டாலே அண்டைய நாளைக்கு வீட்ல எல்லோரும் பட்டினிதான். இப்படியிருக்க எப்படி ஒபரேசன் செய்றது?

2008 சுதந்திரபுரத்தில நாங்க இடம்பெயர்ந்து இருந்தபோது அடிச்ச ஷெல் பட்டுத்தான் நான் காயப்பட்டனான். ஷெல் ‘பீஸ்’ ஒன்று நெத்தியில ஏறீற்று. அதோடதான் இடம்பெயர்ந்து இராணுவத்தின்ர கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தம். அதுக்குப் பிறகு வவுனியாவுக்கு கொண்டு போனவங்கள், உடனடியாவே அனுராதபுரத்துக்கு ஏத்தினாங்கள். அங்க ஸ்கான் எல்லாம் செய்துப் பார்த்திட்டு ‘பீஸ’ எடுக்கேலாது என்று சொல்லிச்சினம்.

மீள்குடியேறி வந்தபிறகு கொஞ்சகாலம் நல்லாதான் இருந்தனான். பிறகு வலிப்பு வரத் தொடங்கிட்டு. சரியா கஷ்டப்பட்டனான். ரெண்டு வருஷமா இப்ப கடவுளே என்று வலிப்பு வாறதில்ல.

வெயில் நேரம் வேலை செய்ய ஏலாது. தலை குத்தும். ஏதேதோ பேசுவன் என்று சொல்லுவினம். சண்டை பிடிப்பன் எண்டும் சொல்லுவினம். அதனால தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்கொள்ளுவன். இல்லையெண்டால் நிழலான ஒரு இடத்தில அப்படியோ இருந்திடுவன். இப்படி இருக்கிற எனக்கு யாரும் வேலை தர விருப்பப்பட மாட்டாங்கள்தானே. வேலை செய்யாமல் இருந்தால் அவங்களும் சும்மா சம்பளம் தருவாங்களா? பிறகு ஐஸ் பழம் யாவாரம் செய்தன். சைக்கிள்ல போய். அதுவும் கொஞ்சநாள்தான். என்னதான் தொப்பி போட்டாலும் வெயில் தாங்க முடியேல்ல. அதையும் விட்டுட்டன். இப்பதான் ஒரு நிறுவனத்தில வேலை கிடைச்சிருக்கு. 2 மாதமா செய்துகொண்டு போறன்.

மூன்று பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போயினம். நான் எடுக்கிற சம்பளம் காணாது. இவா கடற்கரைக்கு போவா, வலை பின்ன. மீன் பட்டால் கறிக்கு மீனும் தந்து 200, 300 ரூபா காசும் தருவாங்கள். இல்லையெண்டால் அதுவும் இல்ல.

இவாட வயசான அம்மாவும் அப்பாவும் எங்களோடதான் இருக்கினம். அவங்களயும் நாங்கதான் பார்க்கவேணும். வருமானம் போதாததால ரவுண்ட்ஸ் பொறுக்கி விற்க ஆரம்பிச்சம். இப்ப அதையும்தான் செய்துகொண்டு வாறம். பின்னேரம் மூன்று மணியிலிருந்து 6.30 மணிவரைக்கும் ஒவ்வொரு பங்கரா பார்த்து, நாய் விறாண்றமாதிரி விறாண்டி ரவுண்ட்ஸ் பொறுக்கிக்கொண்டு வருவம். ஒவ்வொரு கிழமையும் சேர்த்து இரும்புக் காரன்ட குடுப்பம். அவன் ஒரு கிலோ 20 ரூபாவுக்குத்தான் எடுப்பான். அதில வார காசையும் வச்சி சமாளிக்கிறம். ரவுண்ட்ஸ் பொறக்குற வேல ஆபத்துதான், தெரியும். ஆனால் சாப்பிடனுமே. நானும் இவாவும்தான் போவம். பிள்ளைகள ஒருநாளும் கூட்டிக்கொண்டு போகமாட்டம்.

தலையில இருக்கிற இந்த “பீஸ” எடுக்கவேணுமே என்று ஒரு நாள் கூட நினைச்சதில்ல. அதனாலதான் வேறெங்கேயும் போய் செக் பண்ணவும் இல்ல. அப்படி போனால் ஒரு நாள் அதுக்கேயே முடிஞ்சிரும். அதைவிட பிள்ளைகளின்ர பசிய போக்குறதுதான் எனக்கு முக்கியம்.

2009 மார்ச் மாதம் 6ஆம் திகதி. இன்னும் நல்லா நினைவிருக்கு. எப்படி மறக்க முடியும். என் கண் முன்னாலயே என் மகள் கடவுளிட்ட போன நாள். இப்போ அந்த நாள நினைக்கும்போது உடம்பெல்லாம் நடுங்குது.

பெரிய சனக்கூட்டம், இடம்பெயர்ந்து கொண்டிருந்தம். நாங்க இந்த இடத்திலெண்டா மகள் அந்தா அங்க மரம் இருக்கே, அவ்வளவு தூரம் முன்னால போய்க்கொண்டிருந்தா. திடீரென்டு பெரிய சத்தம். என்ர கால்ல ஏதோ பட்டது போல ஓர் உணர்வு. முன்னால ஆக்களின்ர அலறல் கேட்டுக்கொண்டே இருக்குது. என்னால எழும்பி நிற்க முடியேல்ல. முன்னால போன மகளுக்கு என்ன நடந்திருக்குமோ எண்டு தரையில ஊன்ற முடியாத கால இழுத்துக்கொண்டு ஆக்கள விலத்தி விலத்தி உள்ள போய் பார்த்தன். என் கண் முன்னாலேயே எந்த அசைவும் இல்லாம அப்படியே கிடந்தா. எனக்கு அப்போதே தெரியும் அவ கடளிட்ட போயிற்றா என்டு. எனக்கிருந்த ஒரேயொரு மகள் அவள்.

அன்டைக்கு என்ட கால்ல பட்ட காயத்தின்ட வலி மனசுல ஏற்பட்டது மாதிரியே இன்னும் அப்படியேதான் இருக்கு. ‘பீஸ்’ இருக்குதென்றே தெரியாது. இப்ப ஒரு வருசமாதான் வலியா இருக்கு. இவரின்ர தொந்தரவால யாழ்ப்பாண ஹொஸ்பிட்டலுக்குப் போய் பார்த்தன். எக்ஸ்ரே எடுத்தா ‘பீஸ்’ கிடக்கு. பெரிய ‘பீஸ்ஸொ’ண்டும் குருனி குருனியா 5, 6 ‘பீஸ்’ போல கிடக்கு. எலும்புக்குள்ள இருக்கிறதால எடுக்க ஏலாதெண்டு டொக்டர் சொல்லினம்.

முன்ன மாதிரி நடக்க ஏலாது. கொஞ்சம் நடந்தவுடனே கால் குத்த ஆரம்பிச்சிடும்.வெயிலும் கூடக் கூட வேதனையா இருக்கும். நித்திரை கொள்ள ஏலா, கொதியா இருக்கும்.

அதனால பெரிசா எங்கயும் போறதில்ல. இவர் திரிவீல் ஓடுறவர். அதுல வாற வருமானத்த வச்சிதான் குடும்பத்த நடத்திக்கொண்டிருக்கிறம்.

இறுதிப் போரில மாத்தளன்ல வச்சி காயப்பட்டன். ஷெல் ‘பீஸ்’ ஒன்று கழுத்துப் பக்கமா ஏறிற்று. இராணுவத்தின்ர பக்கம் போறதுக்கு முதலே என்ர வலது காலும் கையும் செயலிழக்கத் தொடங்கீற்று. முகாமுக்குப் போய் உடனடியா வவுனியாவுக்கு என்னை கொண்டு போனவங்க. அங்கயும் பார்த்திற்று கண்டிக்கு அனுப்பிவைச்சவங்கள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கேயே இருந்து ட்ரீட்மென்ட் எடுத்தன். எடுத்து என்ன பயன், வலது காலும் கையும் வழமைக்குத் திரும்பேல்ல. காலை கொஞ்சமாவது அசைக்கலாம், கையில ஒரு விரல கூட அசைக்க முடியாது. ஏன் வாழவேணும் எண்டுகூட நினைச்சன். சரியான கஷ்டம். அரசாங்கம் எந்த உதவியும் செய்யேல்ல. அரசசார்பற்ற நிறுவனங்கள் கொஞ்சம் உதவிசெய்திருக்கு. என்னால எந்தத் தொழிலும் சரியா செய்ய முடியாது.

இருந்தும் ரெண்டு பிள்ளைகளின்ர எதிர்காலத்த நினைச்சி கடற்கரை வழியா போய் வேலை கேட்பன். வலை கட்ட மட்டும் கூப்பிடுவாங்கள். ஒரு நாளைக்கு 200, 300 ரூபா தருவினம். சிலநேரம் ஒரு மீனும் கிடைக்கும்.

ஒருமுறை யாழ்ப்பாண ஹொஸ்பிட்டலுக்கு போய் காட்டினனான். எக்ஸ்ரே எடுத்துப் போட்டு ‘பீஸ்’ நரம்புக்குள்ள இருக்கிறதால எடுக்கேலாது எண்டு சொன்னவங்கள். அதை எடுத்தா ரெண்டாவது தரம் பரலைஸாக்குமாம். அதுக்குப் பிறகு அப்படியே விட்டிட்டன். இப்ப ஒவ்வொரு மாசமும் மாஞ்சோலை ஆஸ்பத்திரிக்கு கிளினிக் போறன். உலைவு இருக்கிறதால மருந்து தருவாங்கள். சிலநேரம் பணடோல் மட்டும் தருவாங்கள். அதனால ஒரு சில மாதங்கள்ல போறதும் இல்ல.

இடது கை மூட்டுக்கும் நெஞ்சுப் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில ‘ரவுண்ட்ஸ்’ ஒண்டு இருக்கு. இந்தக் கைய என்னால் தூக்க முடியாது. காலில போல்ஸ்ஸும் இருக்கு. கைக்கு அகப்படும். பார்க்கிறதுக்குத்தான் நான் முழு மனுசனா இருக்கிறன். மற்றும்படி என்னால ஒண்டும் செய்ய ஏலாது.

காயப்பட்டு கிட்டத்தட்ட 20 வருஷமாகீற்று. இது இருக்கிறதால இதுவரை காலமும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கிறன். எப்படியாவது எடுத்திறலாம் எண்டு மனசுக்கு தோன்றினாலும் அப்புறம் ஏதாவது சிக்கல ஏற்படுத்திடுமோ என்ற பயமும் இருக்கு. நாளைக்கே எனக்கு ஏதாவது நடந்திட்டா பிள்ளைகளையும் மனிசியையும் யார் பார்க்கிறது?

அதோட என்ர உடம்புல இருக்கிற ‘பீஸ’ எடுக்கிறதெண்டால் நிறைய காசு தேவை. சாப்பிடுறதுக்கே காசு இல்லாம இருக்கிறம். அன்றண்டைக்கு உழைச்சாதான் சாப்பிடலாம். பாருங்கோ, வீட்ட சுற்றி வேலிய கூட அடைக்க முடியாம இருக்கிறன். ஊரில இருக்கிற மாடெல்லாம் தோட்டத்துக்குள்ள வருது. வச்சிருக்கிற ஒன்றிரெண்டு பயிரயும் மேய்ஞ்சிற்று போகுது. வேலிய அடைக்க பெரிசா காசு ஒண்டும் தேவையில்ல. மரங்கள வெட்டினா வேலிய அடைச்சிறலாம். முள்ளுக்கம்பி வாங்கவேணும். அதை விட அன்றைய நாள் வேலைக்குப் போகாம வீட்டில இருக்கவேணும். பிறகெப்பிடி அன்றைக்கு சாப்பிடுறது?

மருந்து எடுக்கப்போனாலும் இதே நிலைமைதான். அதனாலேயே போறதில்ல. இப்ப போகவேணும் போலதான் இருக்கு. முன்னப்போல இப்ப வெயில்ல இருக்க முடியேல்ல. தலை குத்த ஆரம்பிக்குது, மயக்கம் வாற மாதிரி. இருக்கிற இடத்திலயே அப்படியே தரையில் இருந்திடுவன்.

யாரிட்டயும் போய் உதவி கேட்கிற மனநிலையிலயும் நான் இல்ல. இருக்கிறத கொண்டு வாழ்ந்திற்றுப் போவம்.

நான் மேசன் தொழில்தான் செய்றன். ஆனால், இப்ப பெருசா செய்றதில்ல. தலையில ‘பீஸ்’ இருக்கிறதால வெயில்ல நிற்க ஏலாது. கண் இருட்டிக்கொண்டுவரும். தலை சுத்தும், விறைக்கும். அதனால மேசன் தொழில விட்டுட்டு மீன் பிடிக்க போறன். பின்னேரம் குளத்துக்குப் போயிற்று காலையில திரும்பி வருவன். சில வேளைகள்ல கடுமையான குளிரா இருந்தாலும் ஒரு இடத்தில இருக்கமுடியாது. தலைய கழற்றிவைக்கனும் போல இருக்கும். யார் பேசினாலும் கோவம் வரும். எரிஞ்சி எரிஞ்சி விழுவன் என்று சொல்வாங்க.

2009 இடம்பெயர்ந்து கொண்டிருக்கேக்கத்தான் காயப்பட்டன். முகாமுக்குப் போய் வவுனியா ஹொஸ்பிட்டல்ல மருந்து எடுத்தது மட்டும்தான், அதுக்குப் பிறகு எங்கயும் போகேல்ல. எடுத்தா நிம்மதியா இருக்கலாம் எண்டு நினைக்கிறன். ஆனா வசதியேதும் இல்லையே. மல்லாகம் போகனும், எக்ரே எல்லாம் எடுக்கவேணும்.

பிள்ளைகள் 3 பேரும் படிக்கினம். மனிசிக்கும் இப்ப ஏலாது. விழுந்து கை முறிஞ்சிருக்கு. கைக்கு போட்டிருக்கிற கம்பிய கழற்றப் போகவேணும். நாளும் பிந்திட்டு, இன்னும் போகாம இருக்கிறம். அவளால ஒண்டும் செய்ய ஏலாது.

இதெல்லாம் நினைச்சிக்கொண்டுதான் இப்ப மேசன் தொழிலுக்கும் போறன். குளத்தில இருந்து வந்தவுடன் மேசன் தொழிலுக்குப் போயிருவன். வெயிலா இருந்தாலும் மழையா இருந்தாலும் இப்ப வேலை செய்தே ஆகவேணும். என்ன செய்ய, எங்கட காலம் இன்னும் கொஞ்சநாள்ல முடிஞ்சிடும். பிள்ளைகள படிப்பிக்க வேணுமே.

* பெயர் மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பு:

பீஸ்: எறிகணை குண்டுச் சிதறல்கள்

போல்ஸ்: எறிகணை, விமானக் குண்டுகளில் உள்ளடங்கியிருக்கும் சிறிய உலோக உருளைகள்

ரவுண்ட்ஸ்: துப்பாக்கி ரவைகள்