குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல் ஸ்டாலின் மக்களை ஏமாற்றிவிட்டார் – முதல்வர் பழனிசாமி

213 0

குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல் ஸ்டாலின் மக்களை ஏமாற்றிவிட்டார் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடி, ஆம்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்தியாவில் 543 பாராளுமன்ற தொகுதியில் 542 தொகுதிக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ஆனால் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. இந்த தேர்தல் நிறுத்தப்பட யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நகைக்கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை பொய் மூட்டைகளாக அவிழ்த்து விட்டு வெற்றி பெற்றார்கள்.

குழந்தைகளுக்கு கவர்ச்சிகரமான கவரில் சுற்றி மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் மக்களை ஏமாற்றி ஸ்டாலின் வெற்றி பெற்று விட்டார்.

இது உண்மையான வெற்றி அல்ல. தற்போது நடைபெற உள்ள வேலூர் தேர்தலில் என்ன பொய்களை சொல்லி ஸ்டாலின் ஓட்டு கேட்பார் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு பொய் பிரசாரம் எடுபடாது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எந்த தேர்தலிலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் இயக்கம்.

 

முக ஸ்டாலின்

 

நாங்கள் உண்மையை மட்டும் கூறி ஓட்டுகளை பெறுவோம். ஆனால் எதிர் அணியினர் திட்டமிட்டு பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஓட்டுகள் பெறுகின்றனர்.

நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் தமிழகத்தை ஆள்வதற்கு அ.தி.மு.க. தான் சிறந்த கட்சி என தெரிந்து எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். ஆகவே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி என்ற கனவு என்றுமே நிறைவேறாது.

கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தில் பொருளாதாரம் மேம்பாடு அடையும். அங்கு அமைதி நிலவும். எனவே தமிழகத்தில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா பல்லாயிரக்கணக்கான கோடிகளை மாணவர்களின் கல்விக்கு ஒதுக்கீடு செய்தார்.

இந்தியாவில் இதுவரை எந்த மாநில அரசும் வழங்காத திட்டமான இலவச லேப்-டாப் திட்டத்தில் 43.50 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கியுள்ளோம்.

வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட இப்படிபட்ட திட்டம் செயல்படுத்தப்பட வில்லை. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும்.

தி.மு.க. ஆட்சியின் போது 100-க்கு 32 பேர் உயர்கல்வி படித்தார்கள். தற்போது இந்தியாவிலேயே அதிகபட்சமாக 100-க்கு 48.6 மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகிறார்கள்.

வேலூர் மாவட்டம் முழுவதும் வாணியம்பாடி உள்பட 11 நகராட்சி, 5 பேரூராட்சி மற்றும் 944 ஊரக ஊராட்சியில் ஆயிரத்து 300 கோடி ரூபாயில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சுகாதார துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கி வருகிறோம்.

வேலூர் தொகுதி தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை தொழிலாளர் குடும்பத்தினருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

எத்தனை அவதாரம் எடுத்தாலும் மு.க.ஸ்டாலினால் ஆட்சி அமைக்க முடியாது. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்றாலும் மக்கள் தி.மு.க.வை தொங்கலில் விட்டுள்ளனர். மத்தியிலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முடியவில்லை.

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்துவிட முடியாது. பல பொய்களை சொல்லி ஓட்டு பெற்றனர். பொய் சொல்வதற்காகவே அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்.

ஸ்டாலின் மீண்டும் ஓட்டு கேட்க வருவார். டீ கடைக்கு சென்று டீ குடிப்பார். மார்க்கெட்டுக்கு செல்வார். பொய் சொல்லி ஓட்டு கேட்பார். மக்களே உஷாராக இருங்கள். ஏமாறாதீர்கள்.

ஐ.எஸ்.ஐ. தரம் பெற்ற கட்சி அ.திமு.க. முத்திரையில்லாத கட்சி தி.மு.க., அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். ஆனால் தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்ப வாரிசுகள் தான் பொறுப்புக்கு வருவார்கள். மக்களுக்கான கட்சி அ.தி.மு.க., தி.முக. கார்ப்பரேட் கம்பெனி. ஆகவே அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று குடியாத்தம், கே.வி.குப்பத்தில் பிரசாரம் செய்கிறார்.