ஹூஸ்டன், வளர்ப்பு மகளான, மூன்று வயது குழந்தையை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, கேரள கம்ப்யூட்டர் இன்ஜினியர், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெஸ்லி மேத்யூஸ் – சினி மேத்யூஸ் தம்பதி. கம்ப்யூட்டர் இன்ஜினியர்களான இருவரும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பணிபுரிந்தனர். இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த, 2016ல் இந்தியா வந்தபோது, பீஹார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தில் உள்ள, ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து, மூன்று வயது பெண் குழந்தை ஒன்றையும் தத்தெடுத்தனர். அமெரிக்கா சென்றவுடன், அந்தக் குழந்தைக்கு, ஷெரீன் மேத்யூஸ் என பெயர் சூட்டினர்.இந்நிலையில், 2017, அக்டோபரில், இரவில் பால் குடிக்காததால், குழந்தை ஷெரீனை வீட்டுக்கு வெளியே நிறுத்தினேன்; அதன் பின் காணவில்லை என, டல்லாஸ் போலீசில், வெஸ்லி புகார் செய்தார்.விசாரணை நடந்த நிலையில், 15 நாட்களுக்கு பின், வெஸ்லியின் வீட்டில் இருந்து சற்று துாரத்தில் உள்ள கால்வாயில் , ஷெரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.பிரேத பரிசோதனையில், அந்தக் குழந்தை, சித்திரவதை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி, வெஸ்லி மேத்யூஸ் – சினி மேத்யூஸ் தம்பதியை கைது செய்தனர்.
இந்த வழக்கு டல்லாஸ் நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த மார்ச்சில், வழக்கில் இருந்து, சினி மேத்யூஸ் விடுவிக்கப்பட்டார்.விசாரணை முடிவில், ஜூன், 26ல், வெஸ்லி மேத்யூஸ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், டல்லாஸ் மாகாண சிறையில், நேற்று அடைக்கப்பட்டார்; 30 ஆண்டுகளுக்கு பிறகுதான், அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியும்.இந்த சம்பவத்துக்கு பின், இந்தியாவில், குழந்தை தத்தெடுப்பு விதிமுறைகள் மேலும், கடுமையாக்கப்பட்டன.

