ஆஸ்திரேலிய வான்பரப்பில் பறந்த இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலத்தை, யுபோ என்று அழைக்கப்படுகிற அடையாளம் காணமுடியாத பறக்கும் தட்டு என அந்நாட்டு மக்கள் நினைத்துக்கொண்டனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த திங்கட்கிழமை விண்ணில் ஏவியது.
இந்த ராக்கெட் ஆஸ்திரேலிய நாட்டின் வான்பரப்பில் மேகமூட்டங்களுக்கு இடையே பறந்தபோது வானில் பெரும் வெளிச்சம் தோன்றியது.
அதை குயின்ஸ்லாந்து மாகாணம் மற்றும் வடக்கு பிராந்தியத்தை சேர்ந்த மக்கள் பார்த்ததும் அது, யுபோ என்று அழைக்கப்படுகிற அடையாளம் காணமுடியாத பறக்கும் தட்டு என நினைத்துக்கொண்டனர்.
மேலும் பலர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களை தொடர்பு கொண்டு தங்கள் பகுதியில், வானில் பறக்கும் தட்டு தெரிவதாக கூறினர். அதன் பேரில் பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்து, வானில் தோன்றிய பெரும் வெளிச்சத்தை வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர்.
அதை பார்த்த வானியல் வல்லுநர்கள் அது பறக்கும் தட்டு இல்லை, விண்கலத்தை ஏந்திச் சென்ற இந்திய ராக்கெட் என்பதை தெளிவுபடுத்தினர்.

