இடுக்கியில் கனமழை கொட்டியும் பெரியாறு அணை நீர்மட்டம் உயராத மர்மம்

313 0

கேரள மாநிலம் இடுக்கியில் கனமழை கொட்டி தீர்த்தும் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயராமல் இருப்பதற்கு கேரள அரசின் சதிவேலையே காரணம் என தெரிய வந்துள்ளது.கேரள மாநிலம் இடுக்கியில் கனமழை கொட்டி தீர்த்தும் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயராமல் இருப்பதற்கு கேரள அரசின் சதிவேலையே காரணம் என தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. ஆனால் தாமதமாக தொடங்கினாலும் கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

இருந்தபோதும் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 114 அடி அதாவது 2 அடி மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் பெரியாறு அணையை விட 8 மடங்கு பரப்பளவில் பெரிய இடுக்கி அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 10 அடி உயர்ந்துள்ளது.
இடுக்கி அணை

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி 777 சதுரகி.மீ ஆகும். அணையின் நீர்மட்டம் 152 அடி. இதில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை நீர் தேக்கி வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 17-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 50 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. 777 சதுர கி.மீ பரப்பளவில் பெய்யும் மழை நீர் முழுவதையும் பெரியாறு அணையில் தேக்க அணை ஒப்பந்தம் மூலம் தமிழகத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

தேக்கடியில் பெய்யும் மழைநீரையும், பெரியாறு அணையில் பெய்யும் மழைநீரையும் மட்டுமே தமிழக பொதுப்பணித்துறையால் கணக்கெடுக்க முடியும்.

ஆனால் அணையின் நீர்பிடிப்பு பகுதியான 777 சதுர கி.மீ பரப்பில் பெய்யும் மழை நீரை கேரள அரசுதான் கணக்கெடுக்கிறது.

இதனை கேரளா விரும்பினால் தகவல் தெரிவிக்கும். விரும்பாவிட்டால் மழையளவு குறைந்துள்ளதாக கணக்கு காட்டிவிடும்.

கடந்த 17-ந்தேதி முதல் இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இவ்வளவு மழை பெய்தும் பெரியாறு அணைக்கு 1000 கனஅடி தண்ணீர் கூட விநாடிக்கு வரவில்லை. ஆனால் அதேநேரம் இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பெரியாறு அணை நிறைந்தால் மட்டுமே உபரிநீர் வண்டிப்பெரியாறு வழியாக திறக்கப்படும்.

ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம் 114 அடிக்கு குறைவாக உள்ளபோதே வண்டிப்பெரியாறு ஆற்றில் 8 அடி உயரத்திற்கு பெருக்கெடுத்து ஓடுகிறது.

கேரள அரசு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணை கட்டி பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை திருப்பி விட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. கடந்த ஆண்டு வரை பெரியாறு அணைக்கு குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

கேரள அரசு சுரங்கம் தோண்டி நீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு செல்கிறது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான 777 சதுர கி.மீ-ல் 277 சதுர கி.மீ தமிழக வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் காமராஜர் காலத்தில் சிவகிரி மலைப்பகுதியில் செண்பகவள்ளி தடுப்பணை சீரமைக்கப்பட்டது.

ஆனால் கேரளா இந்த அணையை இடித்து விட்டது. அதன்பின் தமிழக-கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தடுப்பணை கட்டுவது என்றும், அதற்கான செலவை தமிழக அரசு ஏற்பது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அணை கட்டுவதற்கு தேவையான பணத்தை டெபாசிட் செய்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை கேரள அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசும் இதுகுறித்து கேள்வி எழுப்பவில்லை. எனவே தமிழக வனப்பகுதியில் பெய்யும் மழைநீரும் இடுக்கி அணைக்கு செல்கிறது. எனவே தமிழக அரசு இனிமேலாவது தலையிட்டு இப்பிரச்சினையில் உரிய தீர்வு காணாவிட்டால் கனமழை பெய்தாலும் பெரியாறு அணைக்கு நீர்வராத நிலை ஏற்படும் என்றனர்.