ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி தொடர்பில் முறுகல் நிலை

357 0
இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் (SLRC)அதன் தலைவர் பதவி தொடர்பாக ஒரு முரண்பட்ட நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான இன்னோகா சத்தியங்கனி, இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சரான ருவான் விஜயவர்த்தன, சஞ்சீவ விஜேகுணவர்தனவை இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்து, ஜூலை 18 திகதி அன்று நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் புதிய தலைவராக பதவியேற்க, சஞ்சீவ விஜேகுணவர்தன இன்று (22) இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவர் இன்னோகா சத்தியங்கனி, தனது பதவி நீக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக தனக்கு அறிவிக்கப்படவில்லை என கூறி, இருக்கையை கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சஞ்சீவ விஜேகுனவர்தேனாவை நியமிக்க, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.