இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும் – இந்து அமைப்புக்கள்

315 0

இலங்கையில் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் திருக்கேதீஸ்வர நுழைவாயில் வளைவு அகற்றப்பட்டமை ஆகிய விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று இந்து அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள இந்து மாமன்றத்தில் இன்று பத்துக்கும் மேற்பட்ட இந்து அமைப்புக்கள் கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டன. இதன்போதே மேற்படி கோரிக்கை இந்திய அரசுக்கு முன்வைக்கப்பட்டது.

திருக்கேதீஸ்வரம் ஆலய நுழைவு வீதியில் அமைக்கப்பட்ட வளைவு கத்தோலிக்கர்களால் அகற்றப்பட்டமைக்கு இதன்போது கண்டனம் வெளியிடப்பட்டது.

அத்துடன், அந்த வளைவை மீள அமைப்பதற்கு பிரதேச சபை தடையாக இருப்பதற்கு கண்டனம் வெளியிடப்பட்டதுடன், வளைவை மீள அமைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் திருக்கேதீஸ்வரம் ஆலய சீரமைப்புக்கு இந்தியா நிதி உதவி வழங்கியதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அந்த நாட்டு அரசு தலையீடு செய்யவேண்டும் என்றும் இந்து அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தின.

இந்தக் கலந்துரையாடலில் நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத சைத்தன்யா சுவாமிகள், அகில இலங்கை இந்து மா மன்றத் தலைவர் ஆறு திருமுருகன், மன்னார் இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் இந்து குருமார் ஒன்றியம், சைவ பரிபாலன சபைத் தலைவர், அகில இலங்கை சைவ மகா சபை சைவ விருத்தியா சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களும் பங்கேற்றன.